மதுரையில் பயங்கரம்! 31 வயது விதவைப் பெண்ணை மணந்த 21 வயது இளைஞர் படுகொலை! அதிர வைக்கும் காரணம்!

மதுரை அருகே விதவைப் பெண்ணை மறு திருமணம் செய்துகொண்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த குமார் மகன் யுகேஷ் (21). இவர், உசிலம்பட்டி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் போததம்பட்டியைச் சேர்ந்த இந்திரா (31) என்ற விதவை பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.

இந்திராவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் யுகேஷ் அவரை மறுமணம் செய்து கொண்டார்.  ஆனால் இந்திராவின் முதல் கணவரின் சகோதரர் ராம்பிரபு, இந்திராவும் 2 குழந்தைகளும் காணவில்லை என உசிலம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி போலீசார் இந்திரா மற்றும் அவரது இரு குழந்தைகளையும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இந்திராவுக்கு மறு வாழ்வு அளித்த யுகேஷையும் காணவில்லை என தெரியவந்தது.

இதன்பேரில், போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், திடீரென மர்ம நபர்கள் சிலர் யுகேஷை கொடூரமான முறையில் கொலை செய்து, அவரது வீட்டின் முன்பாகவே, சடலத்தை தூக்கிவீசிவிட்டு சென்றுள்ளனர். இதுபற்றி தகவலறிந்த செக்காணூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

யுகேஷின் தந்தை அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர். விதவைப் பெண்ணை மறுமணம் செய்த நிலையில், இளைஞர் கொல்லப்பட்ட சம்பவமும், அவர் திருமணம் செய்த விதவைப் பெண் காணாமல் போன சம்பவமும் உசிலம்பட்டி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.