விநாயகர் சதுர்த்தினா? அது நம்ம மஞ்சு வீடு தான்! 9000 சிலைகளுடன் அசத்தும் கொண்டாட்டம்!

நடுத்தர வயது பெண்ணின் வீட்டில் கிட்டத்தட்ட 9,000 விநாயகர் சிலைகள் உள்ள செய்தியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


ஊட்டியில் மஞ்சு என்பவர் வசித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்றாலே மஞ்சுவின் வீட்டில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்த போது பல்வேறு உண்மைகள் கிடைத்தன.

அதாவது மஞ்சுவுக்கு 2008-ஆம் ஆண்டு மிக ஆபத்தான சாலை விபத்து நேர்ந்துள்ளது. அந்த விபத்து நிச்சயமாக அவருடைய உயிர் பறிபோயிருக்க வேண்டும். அந்த அளவிற்கு அது கொடுமையான விபத்தாகும். ஆனால் அந்த விபத்தில் மஞ்சுவுக்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. அவர் கழுத்தில் அணிந்திருந்த பிள்ளையார் டாலர் மட்டுமே உடைந்தது. 

இதனை உணர்ந்த மஞ்சு பிள்ளையார் தான் தன்னை காப்பாற்றியுள்ளார் என்று புரிந்துக்கொண்டார். அன்றிலிருந்து பிள்ளையார் மீது அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது. வெளியூருக்கு சென்றாலும் அங்கு கிடைக்கும் வித்தியாசமான பிள்ளையார் சிலைகளை வாங்கிவிடுவார். பிள்ளையார் உருவம் இருக்கும் கீச்செயின்கள் ஆகியவற்றையும் மஞ்சு தவறாமல் வாங்கிவிடுவார்.

சாலையோரங்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை எப்படியாவது தன் வீட்டிற்கு வரவழைக்க இயன்ற முயற்சிகளை எடுப்பார்‌. அவருடைய வீட்டின் முகப்பு பகுதியில் எப்பொழுதும் கண் குளிரும் வகையில் ஏராளமான விநாயகர் சிலைகள் இருப்பதுண்டு. 2008-ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 9,000 சிலைகளை வீட்டிற்குள் அடுக்கி வைத்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தி என்றால் அவருடைய வீடு விழாக்கோலம் பூண்டிருக்கும். விநாயகருக்கு சிறப்பு பூஜையும் இன்று நடைபெறும். அக்கம்பக்கத்தினர் ஒருவரையும் விடாமல் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து இந்த பூஜையை செய்வார்.

இத்தகைய பண்புகளை பெற்ற மஞ்சுவின் வீட்டில் என்று எவ்வளவு கூட்டமிருக்கும் என்பதை சொல்லித்தான் தெரியனுமா??