சென்னையில் வாக்காளர்களுக்கு பண விநியோகம் ஜரூர்! வீடு வீடாக சென்று பட்டுவாடா!

சென்னையில் அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.


தென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியில் இரவில் வீடு வீடாக சென்று தினகரனின் அமமுகவினர் பணம் பட்டுவாடா செய்வதாக அதிமுகவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அங்கு  அதிமுகவினர் சென்றுள்ளனர். 

அப்போது அங்கு வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 கொடுத்துக் கொண்டிருந்த அமமுகவை சேர்ந்த பாபு மற்றும் குமார் ஆகிய 2 பேரையும் பிடித்து குமாரன் நகர் காவல் நிலையத்தில் அதிமுகவினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீடு வீடாக சென்று ஓட்டுக்கு தலா ரூ.200 வழங்கிய போது அமமுக கட்சியினை சேர்ந்த குமார், பாபு ஆகியோர் பணம் கொடுக்கும்  வீடியோ ஆதாரத்தையும் அதிமுகவினர் காவல் நிலையத்தில் வழங்கியுள்ளனர்.

ஆனால் அமமுக வினர் இந்த சம்பவத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி பணம் பட்டுவாட செய்தவர்களை அதிமுகவினர் பிடிக்கும் போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் யாரும் அங்கு இல்லை. இதனால் இந்த விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால் மக்களோ பணம் கொடுப்பவர்களை ஏன் அதிமுக தடுக்கிறது என்று கேள்வி கேட்டபடி சென்றனர்.