வேளாண் மண்டலம் போன்று மீனவர் பாதுகாப்பு மண்டலம் அமையுமா? முதல்வர் பழனிசாமி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழக முதல்வர்.எடப்பாடி மு. பழனிசாமி பசும்பொன் கிராமத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசினார்.


பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தேவர் திருமகனார் அவர்களுடைய பிறந்த தினமான அக்டோபர் 30-ஆம் தேதியை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று அறிவித்து, 1979-ஆம் ஆண்டு முதல் இன்றுவரை ஆண்டுதோறும், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 1994-ஆம் ஆண்டு சென்னை, நந்தனத்தில் தேவர் திருமகனார் அவர்களுக்கு முழு திருவுருவ வெண்கலச் சிலையை அமைத்து திறந்து வைத்ததோடு, பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் நினைவிடத்தை புனரமைத்திட ஆணையிட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், இந்நினைவகம் புதுப்பொலிவுடன் இன்றைக்கு திகழ்கின்றது.

மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்படும் என்று 2010-ஆம் ஆண்டு அறிவித்து அதன்படி 9.2.2014 அன்று இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பசும்பொன் கிராமத்திற்கு வருகை தந்து, 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தினை தேவர் திருமகனார் திருவுருவச் சிலைக்கு அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

 தேவர் திருமகனாருக்கு அரசு விழா, சென்னை, நந்தனத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பசும்பொன் நினைவிடத்திலுள்ள திருவுருவச் சிலைக்கு தங்கக் கவசம் என தேவர் திருமகனாருக்கு மென்மேலும் புகழ் சேர்க்கும் பணிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

கேள்வி: இம்மாவட்டத்தில் எந்த விதமான தொழில் வளர்ச்சியும் இல்லை, தொழில் வளம் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளதா? 

பதில் : மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இருக்கின்றபொழுதே 2015-ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, அதுவும் தென் மாவட்டங்களில் குறிப்பாக பின்தங்கிய பகுதியில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அம்மா அவர்கள் அறிவித்து பல தொழிற்சாலைகள் வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வழியில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா வழியில் வந்த அம்மாவின் அரசு, 2019-ஆம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பெரும்பாலான தொழில்கள், இதுபோன்ற பின்தங்கிய மாவட்டங்களில் துவங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, நான் ஏற்கனவே கொரோனா தடுப்பு பணி குறித்தும் மாவட்ட வளர்ச்சிப் பணி குறித்தும் இம்மாவட்டத்திற்கு வருகை தந்தபோது தெரிவித்தேன். இந்த மாவட்டம், வளமாக, செழிப்பாக இருப்பதற்கு காவேரி-குண்டாறு என்ற மிகப் பெரிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தேன். இராமநாதபுரத்தில் மாவட்டத்தில் தான் அதிக ஏரிகள் இருக்கிறது. இந்த அற்புதமான திட்டத்தையெல்லாம் இந்த மக்களுக்கு வழங்குகின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

கேள்வி : இராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்று, மீனவர் பாதுகாப்பு மண்டலமாக அமைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில் : இது வேறு, அது வேறு இரண்டையும் பிரித்துப் பார்க்க வேண்டும். வேளாண் மண்டலப் பகுதிகளில் தான் மீத்தேன், ஈத்தேன் போன்றவை எடுத்தார்கள் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக, அங்குள்ள விவசாயிகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதனால், அந்தப் பகுதிகளெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தைக் குறைப்பதற்கு ஆங்காங்கே தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன, தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

அதற்காக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுதான், அவற்றை நடைமுறைப்படுத்துகின்ற அரசும் அம்மாவின் அரசுதான். ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு கூட மீனவர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசு மானியம் வழங்கப்பட்டு, படகுகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி பல வகைகளிலும் மீனவ மக்களுக்கு அம்மாவின் அரசு உதவி செய்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.