சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கொலை செய்தவர்களை அரசு காப்பாற்ற முயற்சிப்பதை பார்த்தால் ஆளுங்கட்சிகாரர்களுக்கு இதில் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்று கொங்குநாடு மக்கள் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சாத்தான்குளம் கொலையாளிகளை அரசு காப்பாற்றலாமா? கைது செய்ய இன்னும் தயக்கமா?
குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளுக்கு மருத்துவரும், நீதிபதியும், சிறைத்துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பதை பார்த்தால் இதன் பின்னணியில் அதிகாரம் படைத்தவர்கள் இருப்பது தெளிவாகிறது. 10 நாட்களாகியும் கொலை செய்தவர்களை தமிழக அரசு கைது செய்வதற்கு தயக்கம் காட்டுகிறது என்றால் கொலைக்கான தடயங்களை அழிப்பதற்கு கால அவகாசம் கொடுப்பதாகவே தோன்றுகிறது.
சாமானிய மக்களே தடயங்களை அழித்து விடுவார்கள் என்று சொல்லி பிணையில் கூட வர முடியாதபடி சிறையில் அடைப்பது காவல்துறையின் வழக்கம். இதுபற்றி முழு விபரங்களும் தெரிந்த சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை வெளியில் விட்டு வைத்திருப்பது தடயங்களை அழிப்பதற்காக இல்லாமல் வேற எதற்காக இருக்க முடியும். தமிழக அரசு காவல்துறையை கை பொம்மையாக எப்படி பயன்படுத்துகிறது என்பதற்கான சில உதாரணங்களையும் கோடிட்டு காட்ட விரும்புகின்றேன்.
1. நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதிக்குள் நடந்த பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஆய்வு செய்ய கூடாது என்பதற்காக தன் அடியாட்களோடு நாமக்கல் பயணியர் விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் அவர்களை தாக்க முயற்சிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் புகார் கொடுத்த போது நாமக்கல் மாவட்ட காவல்துறை அந்த நிகழ்வுக்கு சிறிது நேரம் முன்பாக நாமக்கல் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர் ஒருவருக்கு மிரட்டல் விடுத்ததாக பொய் வழக்கு போட்டிருக்கிறது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் என்ன நிலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்ட காவல்துறை ஆளுங்கட்சிக்காரர்களுடைய அறிவுறுத்தல் இல்லாமல் தன்னிச்சையாக மனசாட்சியோடு இந்த பொய் வழக்கை போட வாய்ப்பில்லை.
2. நக்கீரன் கோபால் அவர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆளுங்கட்சிக்காரர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையை பயன்படுத்தி கைது செய்யப்பட்டார். முகாந்திரம் இல்லை என்று நீதிமன்றம் விடுவித்தது.
3. ராஜ்யசபா உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி அவர்களை தீவிரவாதியை கைது செய்வது போல விடியற்காலையில் கைது செய்து பிணையில் வர முடியாதபடி சிறையில் தள்ள முயற்சித்தார்கள். நீதிமன்றம் பிணையில் விடுவித்தாலும் ஜாமீன் கொடுக்க கூடாது என்று அரசு தரப்பில் பலத்த முயற்சிகளை செய்தார்கள்.
4. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து பழிவாங்க முயற்சித்தார்கள். நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுத்தது.
5. டாஸ்மாக் கடைகள் அடைப்பதற்கு எதிரான போராட்டங்களின் போது மனிதாபிமானமற்ற முறையில் பெண்கள் உட்பட சாமானிய மக்களை தாக்கிய பல அதிகாரிகள் காப்பாற்றப்பட்டனர்.
6. பொள்ளாச்சி பாலியல் வழக்கை நீர்த்துப் போவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்தார்கள்.
7. இதேபோல கொரோனா காலத்திலும் அரசுக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளை சொன்ன பலபேர் மிரட்டப்பட்டு தங்களுடைய கருத்துக்களை மாற்றி சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இன்னும் இதைப்போல பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நடந்த நடப்புகளை பார்க்கும் போது சாத்தான்குளம் இரட்டை கொலை ஆட்சியாளர்களுடைய ஆதரவு இல்லாமல், அறிவுறுத்தல் இல்லாமல் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே செய்திருக்கிறார்கள் என்பதை நம்ப முடியவில்லை. பிரேத பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பாகவே தமிழக முதலமைச்சர் இருவரும் உடல் உபாதைகளால் இறந்தார்கள் என்று பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொலைக்கான முகாந்திரம் இருக்கிறது என்று நீதிமன்றம் முடிவு செய்த பின்னால் முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன ?. தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல் சாத்தான்குளம் காவல்நிலையத்தை வரலாற்றிலேயே முதல்முறையாக வருவாய்த்துறையிடம் ஒப்படைத்ததற்கு தமிழக அரசினுடைய பதில் என்ன வென்று காட்டமாக கேட்டுள்ளார்.