திட்டமிட்டபடி நடக்குமா திருச்சி திமுக மாநாடு?

திமுக தனது வழக்கமான செண்டிமெண்ட் படி திருச்சியில் மாநாட்டை நடத்தத் திட்டமிட்டது. திமுகவில் மாநாடு நடத்துவதற்கென்றே அவதாரம் எடுத்துள்ள முதன்மை செயலாளர் நேரு வசம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. அவரும் உடனடியாக களமிறங்கி சிறுகனூரில் 500 ஏக்கர் நிலத்தை ஒப்பந்தம் செய்து தடாலடியாக பணிகளை தொடங்கினார்.


இந்த சமயத்தில்தான் ஐபேக் மாநாட்டு ஏற்பாடுகளில் மூக்கை நுழைத்தது. ‘ மேடை இப்படி இருக்க வேண்டும். கொடி தோரணங்களை இப்படி கட்ட வேண்டும்’ என ஐபேக் ஆட்கள் ஆளாளுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்க, நேரு தரப்பு படு சூடாகிவிட்டது.

விஷயம் திமுக தலைமைக்கு பாஸ் ஆக அங்கிருந்து இரு தரப்பையும் கூல் செய்யும் விதமாக பேசியிருக்கிறார்கள். ‘மேடை மட்டுமே ஐபேக் வசம். மற்ற ஏற்பாடுகளை நீங்கள் விரும்புகிறபடி செய்யலாம்’’ என நேருவிடம் சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் தெம்பான நேரு மீண்டும் பணிகளை முழுவீச்சில் தொடங்க மீண்டும், மீண்டும் குறுக்கே வந்துள்ளனர் ஐபேக் ஆட்கள். ஒரு கட்டத்தில் நேருவுக்கும், ஐபேக் டீமின் முக்கிய புள்ளி ஒருவருக்கும் இடையே போனில் வார்த்தை யுத்தமே நடந்திருக்கிறது. நேரு தனது வழக்கமான நரகல் நடையில் வெளுத்துக்கட்ட, ஐபேக் ஆசாமி அரண்டுபோய்விட்டாராம்.

மறுபடியும் இந்த விஷயம் அறிவாலயத்திற்கு பாஸ் ஆக, இரு தரப்பினரும் இந்த வாரம் சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி நேருவுக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியபோது,‘’ மாநாடு நடத்துவதில் அண்ணனை அடித்துகொள்ள இன்னொரு ஆள் பிறந்துவர வேண்டும். அப்படிப்பட்டவரிடம் சின்ன பசங்க இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்பதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும்? ஆரம்பத்தில் அண்ணன் இதை சீரியசாக எடுக்கவில்லை.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இதன் பின்னணியில் வேறு ஏதும் சதி இருக்குமோ என நாங்கள் சந்தேகப்படுகிறோம். அண்ணனின் உட்கட்சி எதிரிகள் அவரை மட்டம் தட்ட ஐபேக்கை பயன்படுத்துகிறார்களோ! என்கிற நியாயமான சந்தேகம் ஏற்படுகிறது. இந்த சந்தேகத்தை தீர்த்துவைக்க வேண்டிய பொறுப்பு தலைமைக்கு இருக்கிறது. இதை செய்யாவிட்டால் நஷ்டம் எங்களுக்கல்ல’’ என்றார்கள்.

ஐபேக் தரப்பில் விசாரித்தபோது, ‘’ ஏற்றுக்கொண்ட பணியை தொழில்முறை நேர்த்தியுடன் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். மற்றபடி யாருடனும் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை’’ என்கிறார்கள். இப்படி இரண்டு பக்கமும் முட்டுவதும் மோதுவதையும் பார்த்தால் தி.மு.க. மாநாடு சிக்கல்தான் என்கிறார்கள்.