டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய விவசாயிகள்… அதிர்ச்சி தரும் மரணம்… வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குமா மோடி அரசு..?

யாரிடமும் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் திடீரென மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்த விவகாரத்திற்கு பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் குடியரசு தினநாளில், ‘கிசான் காந்தந்திர அணிவகுப்பு’ என்கிற பெயரில் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். இந்த போராட்டத்தை கலைக்க போலீஸார் நடத்திய தடியடிக் காட்சிகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. 

குடியரசு தின விழா காரணமாக பிற்பகல் 12 மணிக்கு மேல் பேரணி நடத்த விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலை மீறி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே சிங்கு எல்லையில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. சிங்குவில் மட்டும் 50,000 டிராக்டர்களில் பேரணி நடைபெறுகிறது.

இந்த போராட்டத்தைக் கலைக்க சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் போலீசார் 7க்கும் மேற்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். விவசாயிகள் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, முன்னேறிச் செல்ல முயன்றதால், போலீசார் விவசாயிகள் மீது தடியடி நடத்தினர். இதனால் டெல்லியின் சிங்கு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரை பேரணி வந்தடைந்தபோது, விவசாயிகள் ரிங் ரோடு வழியாக செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே விவசாயிகள் போலீஸ் பாதுகாப்பு வாகனம் மீது ஏறினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். 

இந்த போராட்டத்தில் ஒரு டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிர் இழந்த சூழலில், விவகாரம் வேறு வகையில் மாறிவிடாத வகையில் விவசாயிகள் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

டெல்லி செங்கொடியில் ஏறி விவசாயிகள் கொடியேற்றிய நிகழ்வு வெளிநாடுகளிலும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. இனியாவது, மோடி விவசாய சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் என்பதுதான் பெரும்பான்மை மக்களின் விருப்பமாக இருந்துவருகிறது.