சண்டை போட்டு தாய் வீட்டுக்குப் போன மனைவி..! பூச்சிக்கொல்லி மருந்து குடித்த கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்.

மனைவி குடும்பம் நடத்த வராத விரக்தியில் கணவர் தற்கொலை செய்த சம்பவமானது கபிஸ்தலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கபிஸ்தலம் பகுதிக்கு அருகே திருவைக்காவூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட திருவிஜயரங்கம் தெற்கு தெரு அமைந்துள்ளது. இங்கு பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் வெங்கடேசன். வெங்கடேசனின் வயது 34. இவர் அதே பகுதியில் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். திருமணமாகி 3 ஆண்டுகளாகியும், இவருக்கு குழந்தை பிறக்கவில்லை.

இதனிடையே இவருக்கும் இவருடைய மனைவிக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதனால் அவ்வப்போது மனைவி இவர் மீது கோபித்துக் கொண்டு அரியலூரில் அமைந்துள்ள தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இருப்பினும் சில நாட்கள் கழித்து அவர் குடும்பம் நடத்த வந்துவிடுவார்.

இதனிடையே கடைசியாக கணவன் மனைவி இருவரும் பெரிய அளவிற்கு சண்டை போட்டுள்ளனர்.  வழக்கம்போல மனைவி தன் சொந்த ஊரான அரியலூருக்கு சென்றுவிட்டார். ஆனால் இம்முறை எவ்வளவோ முறை கணவர்  அழைத்தும் மனைவி குடும்பம் நடத்த வரவில்லை.

இதனால் வெங்கடேசன் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். இதனிடையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வெங்கடேசன் வயல்வெளிக்கு உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். 

சம்பவமறிந்த வெங்கடேசனின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது கபிஸ்தலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.