ஒரே நட்சத்திரம், ஒரே ராசியினர் திருமணம் செய்யக்கூடாதா ? ஏன்னு தெரியுமா?

ஏக ராசி என்பது கணவன், மனைவி இருவரும் ஒரே ராசியாக இருப்பதாகும். இதேப்போன்று தான் ஏக நட்சத்திரமும்.


இருவரும் ஒரே நட்சத்திரம் என்றால் இருவருக்கும் இடையே எண்ண ஒற்றுமை மற்றும் புரிதல் உணர்வு நன்றாக இருக்கும் பட்சத்தில் ஏன் ஒரே நட்சத்திரத்தில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கூறுகின்றனர் தெரியுமா?

இந்த உலகில் மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமான திருப்பமாகும். திருமணத்தின் மூலம் இணையும் மணமக்களின் வாழ்க்கை, எண்ண ஒற்றுமை மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்க வேண்டிய சூழல் அனைவரிடத்திலும் இருக்கின்றது.

நாம் ஒருவருக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றால் முதலில் நாம் வலிமையாக இருக்க வேண்டும் என்பது முதன்மையாகும். ஒரே ராசியில், ஒரே நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் எனில் அவர்கள் இருவருக்கும் நடைபெறும் திசாபுத்தியானது ஒரே மாதிரியாக செயல்படும். அதாவது வரவு என்றாலும் இரு மடங்காகவும், செலவு என்றாலும் இரு மடங்காகவும் உண்டாகும்.

மேலும், ஏழரை சனியானது ஒரே வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் தொடங்கி ஒரே நேரத்தில் முடிவடையும். அவ்வேளைகளில் அத்தம்பதிகளுக்கு ஏற்படும் துன்பம் என்றாலும் இரு மடங்காகவும், இன்பம் என்றாலும் இரு மடங்காகவும் உண்டாகும்.

அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கோச்சாரத்தில் ஏற்படும் கிரகங்களின் சாதகமற்ற பெயர்ச்சிகளில் ஒரே நட்சத்திரத்தில், ஒரே பாதத்தில் உள்ளவர்களுக்குள் மன வருத்தங்கள் மற்றும் பொருளாதார சிக்கலும் உண்டாகும். அதனை கருத்தில் கொண்டே ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் என்பது வேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

ஒரே ராசியில் உள்ள வெவ்வேறு நட்சத்திரத்தில் அதாவது ஒன்பது பாதங்களில் ஒருவர் முதல் பாதம், மற்றொருவர் கடைசி பாதம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம். இதில் விதிவிலக்கு உண்டு. அதாவது திருமணம் ஆன இருவர் ஒரே ராசியில் உள்ள வேறுபட்ட நட்சத்திரத்தில் வெவ்வேறு பாதங்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு ஒரு திசாவாகவும், மற்றொருவருக்கு வேறு திசாவாகவும் நடைபெறும்.

அதாவது தம்பதிகளின் ஒருவரின் திசாப்படி ஒரு துன்பம் ஏற்படுமாயின் மற்றொருவரின் திசாப்படி அந்த துன்பத்தை கடப்பதற்கான ஆதரவும், வழிகாட்டுதலும் உண்டாகும். பொதுவாக ஜோதிட சாஸ்திரப்படி, சில நட்சத்திரங்கள் ஒரே நட்சத்திரமாக இருந்தால், திருமணம் செய்யலாம் என்றும் சில நட்சத்திரங்கள் திருமணம் செய்யக்கூடாது என்றும் 'காலபிரகாசிகா' என்ற ஜோதிட நூல் விளக்குகிறது.

பரணி, ஆயில்யம், ஸ்வாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள், மணமகள் மணமகன் நட்சத்திரங்களாக வந்தால், திருமணம் செய்யக்கூடாது. சிறிதுகூட பொருத்தம் இல்லை. இந்த நட்சத்திரக்காரர்களை இணைக்கக்கூடாது.

ரோகிணி, திருவாதிரை,,மகம், அஸ்தம், விசாகம்,,திருவோணம்,உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் மணமகன், மணமகளுக்கு ஒரே நட்சத்திரமாக வந்தால், திருமணம் செய்யலாம். இவை நல்ல பலன்களை கொடுக்கும். தசா சந்திப்பு தோஷம் உண்டாகாது.