நெய்வேலி கோரவிபத்து குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.
நெய்வேலியில் தொடர்ந்து கோரவிபத்து நடப்பது ஏன்..?

கடலூர் மாவட்டம், நெய்வேலி- 2ஆவது அனல்மின்நிலையம், அலகு-5இல் இன்று கொதிகலன்(பாய்லர்) வெடித்ததில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாகியுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஒருவர் பலியாகியிருக்கிறார். மேலும் பலர் உயிரிழக்கும் நிலையுள்ளதாகத் தெரிய வருகிறது.
அதே அனல்மின்நிலையத்தில் கடந்த மே-07ஆம் நாள் இதே போன்றதொரு விபத்து நடந்துள்ளது. அப்போது 4பேர் பலியாகியுள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளனர்.
அடுத்தடுத்து ஒரே இடத்தில் ஒரே மாத இடைவெளியில் இரண்டு கோர விபத்துகள். ஒரு விபத்துக்குப் பின்னரும் இன்னொரு விபத்து எனில், இத்தகைய மோசமான கவனக்குறைவுக்கு யார் பொறுப்பு? இவற்றின் முழுமையான பின்னணியைக் கண்டறிய சிறப்புப் புலனாய்வு விசாரணைக்கு நெய்வேலி லிக்னைட் நிர்வாகம் ஆணையிட வேண்டும். தொடர் விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இத்தகைய விபத்துகள் நிகழாமலிருக்க கூடுதலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்விபத்தில் பலியானோர், காயமுற்றோர் யாவரும் ஏழை-எளிய கும்பங்களைச் சார்ந்த கடைநிலை தொழிலாளர்கள். எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ஒருகோடி ரூபாயும் காயமுற்றோர் குடும்பத்தினருக்கு பாதிப்புகளுக்கேற்ப தலா ரூ.25இலட்சம் முதல் ரூ.50இலட்சம் வரை இழப்பீடும் வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.