விநாயகருக்கு ஏன் அருகம்புல் பிடிக்கும் என்று தெரியுமா ?

விநாயகர் சதுர்த்தி என்றாலே நம் நினைவுக்கு வருவது விநாயகருக்கு பிடித்த அருகம்புல் என்றே கூறலாம். எதற்காக விநாயகருக்கு நாம் அருகம்புல்லை படைக்கிறோம் என்பது இப்போது காண்போம்.


இந்த அருகம்புல்லுக்கும் பின்னால் மிகப் பெரிய தத்துவம் ஒன்று ஒளிந்துகொண்டு இருக்கிறது. அதாவது மழை இல்லாமல் எவ்வளவு பெரிய வறட்சியை இந்த உலகம் சந்தித்தாலும் அருகம்புல் ஆனது காய்ந்து போகுமே தவிர மாறாக அழிந்து போக வாய்ப்பே இல்லை. இதுபோல ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படும் துன்பங்களை நினைத்து சோர்ந்து போகாமல் தைரியமாகவும் தன்னம்பிக்கை உடனும் நிமிர்ந்து நின்று போராட வேண்டும் என்ற தத்துவத்தை இந்த அருகம்புல் நமக்கு உணர்த்துகிறது.

இதுமட்டுமில்லாமல் அறுகம்புல்லை விநாயகருக்கு சாத்துவதற்கு பின்னால் இன்னொரு மிகப் பெரிய புராண கதையும் அமைந்துள்ளது. எமனுடைய மகனான அனலாசுரன் தேவலோகத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்தான் . அவன் யாரை கண்டாலும் அவர்களது சக்தியை உறிஞ்சி கொள்ளும் மிகப்பெரிய சக்தியை வரமாக பெற்றிருந்தான். இதனால் எல்லா தேவர்களும் பெரும் துயரத்தில் ஆழ்ந்தனர்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் நின்றனர். இவர்கள் அனைவரும் விநாயகரிடம் சென்று நடந்ததை பற்றி கூறினர். அதனைக் கேட்ட விநாயகர் அனலாசுரனை ஒரே மூச்சாக விழுங்கிவிட்டார். இதனால் விநாயகரின் உடல்முழுவதும் தகதகவென எரிய ஆரம்பித்தது. இந்த எரிச்சலில் இருந்து விநாயகரை காப்பாற்றுவதற்காக எல்லா தேவர்களும் பால் , நெய் , தயிர் , தேன் என பல பொருட்களைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர் இருப்பினும் அனலாசுரன் ஆல் விநாயகருக்கு ஏற்பட்ட எரிச்சல் அடங்கவில்லை.

இதனால் சப்தரிஷிகளும் தேவர்களும் ஒன்றிணைந்து 21 அருகம்புல்களை வினாயகரின் தலை மீது வைத்தனர். இதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக விநாயகரின் மீது வீசப்பட்ட அனல் தனிய ஆரம்பித்தது. இதனையடுத்து சப்தரிஷிகளும் இணைந்து வினைதீர்க்கும் விக்னேஸ்வரர் இடம் இதேபோல் அருகம்புல்லை வைத்து யார் ஒருவர் உங்களிடம் வேண்டிக் கொள்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் சகல சௌபாக்கியங்களையும் தந்தருள வேண்டும் என வேண்டிக் கொண்டனர். இதற்கு விநாயகரும் அப்படியே ஆகட்டும் என்று பதிலளித்தார். 

விநாயகருக்கு அறுகம்புல் பிடித்தமைக்கு இதுவும் ஒரு கதையாக கூறப்படுகிறது.