சீரடி சாய் பாபா கோவில் நிரந்தரமாக மூடப்படுவது உண்மையா? பிரச்சனைக்கு காரணம் சாய் பாபாவின் பிறப்பிடமா? உண்மை பின்னணி!

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கண்டித்து சீரடியில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள சாய் பாபா கோவில் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக வெளியான தகவல் பல கோடி பக்தர்களை அதிர வைத்துள்ளது.


மராட்டிய மாநிலம் சீரடியில் வாழ்ந்து மடிந்தவர் சாய் பாபா. அவரது பிறப்பிடம் குறித்து தெளிவான மற்றும் உறுதியான தகவல் ஏதும் இல்லை. ஆனால் சீரடியில் சாய் பாபா காலடி படாத இடமே இல்லை. எனவே சீரடியை புனித பூமியாக சாய் பாபா பக்தர்கள் கருதுகின்றனர். தனியாக விமான நிலையம் இயங்கும் அளவிற்கு சீரடி புகழ்பெற்றது.

சீரடியில் உள்ள சாய் பாபா ஆலயத்தில் தரிசனம் செய்ய உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் குவிகின்றனர். இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் அனைத்தில் இருந்தும் சீரடிக்கு விமானம் இயக்கப்படுகிறது. ரயில்களும் இயக்கப்படுகிறது. இதற்கு காரணம் சாய் பாபாவின் பக்தர்களின் எண்ணிக்கை.


சீரடி செல்லும் பக்தர்கள் அங்கு பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களைப் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். பத்கர்களின் வசதிக்காக அங்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மராட்டியத்திலேயே சீரடி நகரம் தனித்து தெரியும் அளவிற்கு அங்கு உட்கட்டமைப்பு வசதிகள் அமோகமாக இருக்கும்.

இதே சூழலில் சாய் பாபா பிறந்ததாக பர்பானி மாவட்டத்தில் உள்ள பத்ரி எனும் இடம் கூறப்படுகிறது. இங்கும் பக்தர்கள் சென்று சாய் பாபா பிறந்த இடம் எனும் நம்பப்படும் இடத்தை தரிசித்து வருகின்றனர். ஆனால் இங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பக்தர்கள் பத்ரி சென்று சாய் பாபாவை தரிசிக்க மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.


இந்த நிலையில் அகமதாபாத் மாவட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது பர்பானி மாவட்டத்தில் சாய் பாபா பிறந்ததாக கூறப்படும் பத்ரியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் சாய் பாபாவின் பிறப்பிடம் பத்ரி என்பதை மராட்டிய அரசு அங்கீகரித்து போல் ஆகிவிட்டது.

இந்த அறிவிப்பின் மூலம் சீரடியின் புகழுக்கும், பெருமைக்கும் சரிவு ஏற்படும் என்று அங்குள்ள ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை கருதுகிறது. அதாவது சீரடியில் சென்று தரிசிப்பவர்கள் பத்ரிக்கும் சென்றால் இங்குள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறையும் என்று நிர்வாகிகள் கருதுகின்றனர்.


இதனால் தான் கோவிலை இழுத்து மூட உள்ளதாக ஒரு தகவலை பரப்பியுள்ளனர். ஆனால் கோவிலை தற்போதைக்கு மூடப்போவதில்லை என்று அறக்கட்டளை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. அதே சமயம் பத்ரி நகருக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கும் மராட்டிய அரசை கண்டித்து சீரடியில் முழு அடைப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

அதாவது சாய்பாபாவிற்கு முழு உரிமையும் சீரடியில் தான் இருக்க வேண்டும் பத்ரி நகருக்கு பெருமை சென்றுவிடக்கூடாது என்கிற எண்ணத்தில் தான் இப்படி ஒரு பிரச்சனையை சீரடி சாய் பாபா கோவில் நிர்வாகிகள் ஏற்படுத்தியுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.