நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி யாருக்கு..? டைம்ஸ் தமிழ் பக்கா கணிப்பு

அடுத்து நடக்க இருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே 21ம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது.


அடுத்து நடக்க இருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே 21ம் தேதி நடக்க இருக்கும் இடைத்தேர்தல் பார்க்கப்படுகிறது. அதனால், இதில் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மும்முரம் காட்டுகின்றன. களத்தின் இறுதிக்கட்ட நிலவரம் எப்படியிருக்கிறது என்பதை பார்க்கலாம்.

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எல்லா வீடுகளுக்கும் நேரடியாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வினர் இன்னமும் சில பகுதிகளில் பணம் கொடுக்கவில்லை. ரூபி மனோகரன் வெளியூர்க்காரர் என்பது ஆரம்பத்தில் பெரிய பிரச்னையாக கூறப்பட்டது. அதேநேரம் அ.தி.மு.க.வின் ரெட்டியார்பட்டி நாராயணனுக்கும் ஊர் மக்களிடம் அத்தனை பரிட்சயம் இல்லை என்பதால் இந்தப் பிரச்னை அடிபட்டுப் போனது.

தேவேந்திரகுல வேளாளர்களின் தேர்தல் புறக்கணிப்புதான் இப்போது பெரிய பிரச்னையாக காங்கிரஸ்க்கு இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் காலம் காலமாக காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப் போட்டவர்கள். எப்படியாவது அவர்களின் ஓட்டுக்களை வாங்கிவிட முடியுமா என்று கடைசிவரை மேல்மட்ட முயற்சிகள் நடக்கிறது. 

அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணி தலைமையில் களம் இறங்கியிருக்கிறார். லோக்கல் அ.தி.மு.க.வினருக்கு நன்றாக வயிறும் பாக்கெட்டும் நிறைகிறது. ஆனால், பொதுமக்களிடம் அவர்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லை என்பதுதான் ஆச்சர்யம். முதல்வர் பழனிசாமியும் பன்னீரும் வந்து ஆக்ரோஷமாகப் பேசிவிட்டுப் போனாலும் மக்களிடம் எழுச்சி இல்லை. கடைசி நேரத்தில் மீண்டும் ஒரு முறை 2,000 ரூபாய் விநியோகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதை நம்பி மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியும் தனியே களம் இறங்கியிருக்கும் பனங்காட்டுப்படை ஹரி நாடாரும் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார்கள் என்றுதான் சொல்லப்படுகிறது. ஆனால், இவர்கள் சார்பில் பணம் சப்ளை செய்யப்படவில்லை என்பதால், இவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் எண்ணிக்கை கேவலமாக அமையவும் வாய்ப்பு உண்டு.

2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய வாக்குகளின் படியும், இன்றைய கள நிலவரப்படியும் காங்கிரஸ் கட்சியே முதல் இடத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது. கடைசி நேரத்தில் கூடுதல் பணம் கொடுத்து காரியம் சாதித்துவிடலாம் என்று நினைக்கும் அ.தி.மு.க.வின் எண்ணம் நிறைவேறுவது கடினம்தான்.