நாங்குநேரி காங்., வேட்பாளரான சென்னை தொழில் அதிபர் ரூபி மனோகரன்! இவர் யார் தெரியுமா?

நாங்குநேரி தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக சென்னை தொழில் அதிபர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.


சென்னையில் உள்ள ரூபி பில்டர்ஸ் நிறுவனர் மனோகரன் தான் காங்கிரசின் நாங்குநேரி வேட்பாளர் ஆகியுள்ளார். சென்னை அருகே உள்ள தாம்பரத்தை சுற்றி உருவாகும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்துமே ரூபி மனோகரன் கை வண்ணம் தான். சொல்லப் போனால் தாம்பரம் பகுதியில் இவர் காலடி படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

இது தவிர டிஎன்பிஎல் தொடரில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணியின் உரிமையாளரும் ரூபி மனோகரன் தான். தாம்பரத்தை சுற்றி ரியல்எஸ்டேட் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டியுள்ள இவர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர். வசந்தகுமாருக்கு நிகரான பணக்காரர். மேலும் மனோகரன் குடும்பம் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறது. 

கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே காங்கிரஸ் சார்பில் போட்டியிட கன்னியாகுமரி தொகுதியை ரூபி மனோகரன் கேட்டிருந்தார். ஆனால் வசந்தகுமாருக்கு அந்த தொகுதி கொடுக்கப்பட்டது. வசந்தகுமாரை போலவே ரூபி மனோகரனும் நாடார் தான்.

எனவே தான் நாங்குநேரி தொகுதியில் ரூபி மனோகரனை களம் இறக்க தற்போதே காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளது.. ரூபி மனோகரும் கூட தேர்தல் பணிகளை ஏற்கனவே தொடங்கிவிட்டார். 

கையில் பசை உள்ள பார்ட்டி என்பதால் காங்கிரஸ்கார்கள் மட்டும் அல்ல அங்குள்ள தி.மு.கவினர் கூட மனோகருக்கு காத்திருக்கிறார்கள்.