கொரோனா காலத்தை முன்னிட்டு வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுற்றுலா ஊர்திகளுக்கான சாலைவரியை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை வைத்திருக்கிறார்.
சாலை வரியை எப்போ தள்ளுபடி செய்யப் போறீங்க..? ராமதாஸ் சுரீர் கேள்வி.
தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை ஊர்தி ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். இத்தகைய சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
கடந்த 5 மாதங்களாக ஊர்திகள் இயங்காததால், வாடகை ஊர்திகளின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களால் ஒரு ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியவில்லை. ஊர்திகளுக்காக வாங்கிய கடனுக்கான தவணைக் தொகையையே கட்ட முடியாததால், அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிந்தும், கடன் தவணை ஒத்திவைப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இத்தகைய சூழலில் வாடும் அவர்களை சாலைவரி கட்டும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல் ஆகும். இத்தகைய ஊர்திகளை இயக்குபவர்கள் பெரு முதலாளிகளும் இல்லை. பெரும்பாலும் வாடகை ஊர்திகளை அவற்றின் ஓட்டுனர்கள் தான் வங்கிக் கடன் பெற்று இயக்கி வருகின்றனர். அவர்களுக்கு வாழ்வாதாரமே ஊர்திகளை இயக்குவதன் மூலம் கிடைக்கும் வாடகை வருவாய் தான்.
அந்த வருவாய் கிடைக்காமல் வறுமையில் வாடும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தரப்பில் சிறப்பு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எந்த உதவியும் வழங்காமல், பல்லாயிரக் கணக்கில் சாலைவரியை செலுத்த வேண்டும் என்று கூறுவது நிராயுதபாணியாக இருப்பவர் மீது இரு முனைகளில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பானதாக இருக்கும்; அது நியாயமல்ல.
எனவே, கொரோனா சூழல் சீரடையும் வரை அனைத்து வகையான வாடகை ஊர்திகளுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.