ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில் ரமலான் நோன்பு குறித்த தகவல்களையும், சில அறிவுறுத்தல்களையும் பார்க்கலாம்.
புனித ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது ஏன் தெரியுமா?

இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரமலான் தொடங்கிவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டு நரகத்தின் கதவுகள் அடைக்கப்பட்டு விடும் என்று முகமது நபி கூறியுள்ளார். ரமலான் மாதத்தில் ஒரு நல்ல செயலைச் செய்தால் அது 70 மடங்காக பெருகும் என்று கூறப்பட்டுள்ளது. ரமலான் முபாரக், ஹேப்பி ரமலான், ரமலான் கறீம் என்ற வாழ்த்துக்கள் மூலம் ரமலான் வாழ்வில் நலன்களை கொண்டு வரட்டும் என வாழ்த்தப்படுகிறது.
இஸ்லாமிய நெறிகள் 5-ல் ரமலான் நோன்பு 4-வது துணாகக் கருதப்படுகிறது. மற்றவை தொழிலில் உண்மையாக இருப்பது, தினமும் 5 முறை தொழுகை, வருவாயில் ஒரு பகுதியில் இல்லாதவர்களுக்கு உதவுதல், ஹஜ் பயணம் ஆகியவை ஆகும்.
ரமலான் நோன்பு பிறை தெரியும் வரை 29 முதல் 30 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. அந்த நாட்களில் சூரிய உதயம் முதல், உணவு, தண்ணீர், தாம்பத்ய நடைமுறைகள் உள்ளிட்ட எதையும் மேற்கொள்வதில்லை இரவு நேரங்களில் உணவு உண்பதையும் பகலில் நோன்பு இருக்கும் போது குரான் படிப்பதையும் வழக்கமாகக் கொள்கின்றனர்.
எனினும் நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் உள்ளிட்டோருக்கு நோன்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. நோன்புக் காலத்தில் இஸ்லாமிய மக்கள் தங்கள் சிந்தனைகளை கண்காணிக்கவும், கோபம், பொறாமை உள்ளிட்ட எதிர்மறை உணர்வுகளை கட்டுப்படுத்தவும், அறிவுறுத்தப்படுகின்றனர்.
நோன்பு தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் உக்கிரமும் அதிகரித்துள்ளதால் நோன்புடன் சேர்த்து உடல் நலனைப் பேண மருத்துவரீதியாக சில அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
உடல் வெப்பமடைவதைத் தடுக்க தினமும் நோன்பை முடித்தவுடன் அதிகபட்சமாக 8 டம்ளர் வரை தண்ணீர் குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. காஃபி, டி உள்ளிட்ட பானங்களை தவிர்ப்பது நல்லது என்றும், உடலின் சக்தியை பேணும் குளிர்ச்சியான வகை பானங்கள் சிறந்தவை என்றும் கூறப்பட்டுள்ளது.
நோன்புக்குப் பின் சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது அவசியம், துரித உணவுகள், வறுவல் வகை உணவுகளை தவிர்த்து விடுவது நல்லது. அவை உடல் பாதிப்பு மற்றும் சோர்வுக்கு வழிவகுத்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உணவில் உப்பைச் சேர்ப்பதில் கவனம் தேவை - அது மறுநாளில் தாகத்தை அதிகரிக்கச் செய்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.