ஆரூடம் என்றால் என்ன? அகத்தியர் ஆரூட சக்கரத்தைப் பற்றிய சில குறிப்புகள்

ஒரு சுப கார்யம் செய்வதற்கு முன்பு எவ்விதக் குறிப்புகளோ, ஏடுகளோ இல்லாமல் அன்றைய கோள்களின் நிலையை வைத்துச் சொல்வதுதான் ஆரூடம்.


இதில் பிரசன்ன ஆரூடம், திசை ஆரூடம், பட்சி ஆரூடம், தெய்வ ஆரூடம், தாம்பூல ஆரூடம், சோழி ஆரூடம், ஏடுவழி ஆரூடம் என்ற சில வகைகள் உள்ளன. இதில் அகத்தியர் அருளிய ஆரூட ஜோதிடம் பிரபலமானது. முயற்சி நம்முடையது; முடிவு இறையருள்படி அமைவது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுவோருக்கு இச் ஜோதிடம் ஏற்புடையதாகும். நடக்கப் போவதைக் கணித முறையில் முன் கூட்டி அறிவிப்பது தான் இந்த ஆருடம்.

இந்த ஆரூட முறையில் 64 கட்டங்கள் கொண்ட ஒரு யந்திரம் பயன்படுகிறது. இந்த யந்திரத்தினை வெள்ளி அல்லது செப்புத் தகட்டில்கீறிக் கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர். இந்த யந்திரத்தை பயன் படுத்தவும் சில நிபந்தனைகளும் உண்டு. அதில் மிக முக்கியமானது சூரிய ஒளி இல்லாத சமயத்தில் இதனை பயன்படுத்தி ஆரூடம் பார்க்கக் கூடாது என்பதாகும். இந்த ஆரூட முறையானது அகத்தியர் அருளிய "அகத்தியர்12000” என்ற நூலில் காணப்படுகிறது.

அறுபத்திநாலு கட்டங்களை கொண்ட இந்த யந்திரம் இல்லாமல் இதனை செயல் படுத்த முடியாது. இந்த யந்திரத்தின் அமைப்பு மிகவும் எளிமையானதாகும். எட்டுக்கு எட்டு அளவிலான சதுரத்தில் 64 கட்டங்களாக பிரிக்கப் பட்ட எளிய அமைப்புடையது. இந்த கட்டங்கள் முழுவதும் எண்களால் மட்டுமே நிரப்பப் பட்டிருக்கும்.

பெரிதான சிக்கலோ, சிரமமோ இல்லாத எளிய ஆரூட முறை இது. இந்த ஆரூட யந்திரத்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தனக்கும் பார்த்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் பலன் சொல்லலாம்.