தலித் மக்களை இனியும் புறக்கணித்தால்..? எச்சரிக்கும் திருமாவளவன்

அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும், காட்டப்படும் ஓரவஞ்சனையையும் தலித் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலின்போது அதிமுகவுக்கு தக்க படத்தைப் புகட்டுவார்கள் என்று திருமாவளவன் எச்சரிக்கை செய்துள்ளார்.


அதிமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி கொஞ்சநஞ்சமல்ல. விசிக சார்பில் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான நிதியைக் குறைத்து பல்லாயிரக்கணக்கான தலித் மாணவர்களின் உயர்கல்வியைப் பறித்தது; அமைச்சரவையிலும் நிர்வாகத்திலும் ஆதிதிராவிடர்களைத் தொடர்ந்து புறக்கணித்துவருவது; தலித் மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தாமலும், ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்தாமலும் வேடிக்கை பார்ப்பது ; சென்னை உயர்நீதிமன்றம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டும் மாநில எஸ்சி ஆணையத்தை இதுவரை அமைக்காமல் இழுத்தடிப்பது; பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளிலும் பஞ்சாயத்து செயலர் பதவிகளிலும் எஸ்சி மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது; அதனால் தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள் செயல்பட விடாது முடக்கப்படுவதற்கு மறைமுகமாகத் துணைபோவது; மனுஸ்மிருதியில் இருப்பதை மேற்கோள்காட்டியதற்காக எம் மீது அவசர அவசரமாக பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தது;

ஆனால் நூற்றுக்கணக்கில் புகார் கொடுத்தும் கூட வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக மற்றும் சங்பரிவார் அமைப்பினர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களைப் பாதுகாப்பது; அரசுப்பணிகளில் ஆதிதிராவிட மக்களுக்கான இடங்களை சரிவர நிரப்பாமல் வஞ்சிப்பது; ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்குவதில் கூட பாரபட்சம் காட்டுவது ; பஞ்சமி நிலம் இரண்டரை இலட்சம் ஏக்கர் கண்டறியப்பட்ட பிறகும்கூட அதை உரியவர்களுக்கு வழங்காமல் காலம் தாழ்த்துவது - போன்ற அதிமுக அரசு தொடர்ந்து இழைத்துவரும் அநீதிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

இவ்வாறு தொடர்ந்து தலித் மக்களின் கோரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் உதாசீனப்படுத்தி வரும் முதலமைச்சர் அவர்கள், திடீரென நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அவரது ஓரவஞ்சனை போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.

தலித் சமூகத்தினருக்கு சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பிற சமூகங்களையும் அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்புக்கு உட்படுத்துவது ஏற்புடையதே. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாறுபாடு ஏதுமில்லை.

இந்நிலையில் சமூக நீதியின் அடிப்படையில் தான் இன்று சாதிவாரி கணக்கெடுப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளதா? அல்லது அரசியல் ஆதாயத்திற்காக - கூட்டணி பேரத்துக்காக இந்த நாடகம் நடத்தப்படுகிறதா? அத்துடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா?

முதல்வரின் அறிக்கையின்படி இது சமூகநீதிக்காகத் தான் மேற்கொள்ளப்படுகிறது எனில், ஆதிதிராவிட மக்களின் கோரிக்கைகள் எதுவும் சமூகநீதி என்பதற்குள் வராதா ? அல்லது, அரசியல் ஆதாயத்திற்காக - சாதிய வாக்குகளுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று வெளிப்படையாக ஆட்சியாளர்கள் ஒப்புக் கொள்வார்களானால், பெரும்பான்மையான மக்கள்தொகையைக்கொண்ட சமூகமான தலித் மக்களின் வாக்குகளை அதிமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா? அல்லது தலித்மக்களுக்கு வாக்குரிமையே இல்லையா?

அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக, தங்களுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகள் தேவையே இல்லை என்று வெளிப்படையாக செயல்படுவது போல, ஆதிதிராவிட மக்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என அதிமுக முடிவெடுத்து விட்டதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.