இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் இருக்குமோ..? எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்கள்... விருந்துக்கு தயாராகும் அ.தி.மு.க.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வருகின்ற 23ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது. பிப்ரவரி 23ம் தேதி தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பி.எஸ். இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.


இதற்காக 23ம் தேதி மீண்டும் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. தேர்தல் காலம் என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் குறிப்பாக மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. புதிய செலவுகள், வரவுகள் தொடர்பான முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட்டாக இருக்கலாம் என்று ஒருதகவல் வெளியாகி உள்ளது. இடைக்கால பட்ஜெட் தொடர்பாக என்னென்ன திட்டங்கள் இடம்பெற வேண்டும். அம்சங்கள் என்ன? என்பது குறித்து விவாதிப்பதற்காக தமிழக முதலமைச்சர் தலைமையில் அண்மையில் அமைச்சரவை கூட்டமும் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இடைக்கால பட்ஜெட் 23ம் தேதி தாக்கல் செய்வதற்கு திட்டமிட்டு அதற்கான அறிவிப்பினை தற்போது சட்டப்பேரவை செயலகம் வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே அ.தி.மு.க. தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் இருக்கும். இப்போது தேர்தல் வேறு வருகிறது, ஆகவே, இன்னும் என்னென்ன நலத்திட்ட உதவிகள் வரப்போகிறதோ என்று மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மக்களை ஏமாற்றிவிடக் கூடாது என்று பட்ஜெட் தயாரிப்பில் ஸ்பெஷல் சேர்க்கும்படி பன்னீருக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறாராம் எடப்பாடியார்.