ஜெயராஜ், பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேசன் செல்வதற்கு முன்பு! பதற வைக்கும் சிசிடிவி காட்சி! அங்கு நடந்தது என்ன?

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணைக்கு வர மறுத்து கடைக்கு முன்பு அமர்ந்து தர்ணா செய்து தரையில் உருண்டு புரண்டதால் காயம் ஏற்பட்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் அதிர வைப்பதாக உள்ளது.


கடந்த 19ந் தேதி ஊரடங்கு விதிகளை சுட்டிக்காட்டி கடையை அடைக்குமாறு போலீஸ் கூறியும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் அடைக்காமல் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றதாகவும் பிறகு அங்கு தாக்கப்பட்ட அவர்கள் கோவில்பட்டி கிளைச்சிறையில் உயிரிழந்ததும் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து முதல் தகவல்அறிக்கை பதிவு செய்திருந்தனர். அதில் சம்பவம் நடைபெற்ற 19ந் தேதி இரவு ஒன்பதரை மணி அளவில் ரோந்து சென்ற போது கடையை திறந்து வைத்திருந்த ஜெயராஜை கடையை அடைக்குமாறு எஸ்ஐ பாலகிருஷ்ணன் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடையை மூட மறுத்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இணைந்து ஆபாசமான வார்த்தைகளில் எஸ்ஐ பாலகிருஷ்ணனை திட்டியதுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விசாரணைக்கு வராமல் தரையில் உருண்டு புரண்டதால் தான் அவர்கள் உடலில் காயம் இருந்ததாகவும் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடைக்கு அருகாமையில் உள்ள கடையில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளின் படி இரவு ஒன்பது 43 மணி அளவில் ஜெயராஜ் தனது கடைக்கு வெளியே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.

எதிரே சாலையின் மறுபுறம் காவல் நிலைய வாகனம் ஒன்று நிற்கிறது. பிறகு செல்போனில் பேசியபடியே ஜெயராஜ் காவல் நிலைய வாகனத்தை நோக்கி செல்கிறார். பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து கடைக்குள் இருந்து பென்னிக்ஸ் வெளியே வந்து தனது தந்தை சென்ற காவல் நிலைய வாகனத்தை நோக்கி செல்கிறார்.

இதனை தொடர்ந்து அந்த காவல் நிலைய வாகனம் அங்கிருந்து சென்றுவிடுகிறது. பென்னிக்ஸ் தனது கடைக்கு திரும்பி கடையை பூட்டிவிட்டு தனது நண்பர்களுடன் காவல் நிலையத்திற்கு பைக்கில் செல்வதும் அந்த சிசிடிவியில் உள்ளது. அந்த இடத்தில் வாக்குவாதமோ, தகராறோ எதுவும் ஏற்பட்டது போல் தெரியவில்லை.

மேலும் மற்ற கடைக்காரர்கள் கடையை அடைத்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடையை அடைக்காமல் தகராறு செய்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஜெயராஜ் கடைக்கு அருகாமையில் உள்ள அனைத்து கடைகளும் திறந்தே இருந்தன. அந்த கடைகளை அடைக்கும்படி எந்த போலீஸ்காரரும் கூறவில்லை.

மேலும் காவல் நிலையத்திற்கு வர மறுத்து ஜெயராஜ் - பென்னிக்ஸ் தகராறு செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயராஜ் எவ்வித எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக காவல் வாகனத்தை நோக்கி சென்றது தெரியவந்துள்ளது. இதே போல் ஜெயராஜ், பென்னிக்ஸ் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதாகவும், தரையில் உருண்டு புரண்டதாகவும் முதல் தகவல் அறிக்கையில் சாத்தான் குளம் போலீசார் கூறியிருந்தனர்.

ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடைபெறவில்லை. இருவருமே அமைதியாக காவல் நிலையம் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இதே போல் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காயம் எதுவும் இல்லாமல் நல்ல உடல் நலத்துடனேயே காவல் நிலையம் சென்றதும் இந்த சிசிடிவி மூலம் உறுதியாகியுள்ளது.