அனுமன் வாலில் குங்குமம் வைப்பது எதற்காக? சக்தி தரும் அதிசய வழிபாடு!

ராமாயணத்தைப் பற்றியும், ராமரைப் பற்றியும் பேசும் போதெல்லாம், அனுமனைத் தவிர்க்க முடியாது.


ராமாயணத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள், உயரிய காரியங்களைச் செய்திருந்தாலும் கூட, ராமபிரானுக்கு அடுத்தபடியாக மக்கள் அனைவரும் வணங்கும் இடத்தில் இருப்பது அனுமன் மட்டுமே. தன்னலம் கருதாது, எவ்வித பலனும் வேண்டாது ராமபிரானுக்கு சேவை செய்தவர் ஆஞ்சநேயர்.

அப்படிப்பட்ட பக்தர்களுக்கு கடவுளின் அருகில் இடம் பதிவு செய்யப்படும் என்பதையே, ஒவ்வொரு வைணவக் கோவில்களிலும் இருக்கும் ஆஞ்சநேயர் வடிவம் நமக்கு உணர்த்துகிறது. இல்லத்தில் அனுமன் படம் வைத்து, அனுமனின் வால் பகுதியில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானதாகும்.

அனுமனுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். அனுமன் சூரியனைக் குருவாக நினைத்து வலம் வந்த போது மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுமனின் பின் வலம் வந்தது. இதன் காரணமாகத்தான் அனுமனின் வாலிற்குப் பின் ஒன்பது நவ கிரகங்களும் அமைந்துள்ளது.

எனவே அனுமனின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் இட்டு தொடர்ந்து 48 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் நவகிரகங்கள் அனைத்தையும் முழுமையாக வழிபட்டதற்குச் சமமாகும். மேலும் அனுமனின் வாலில் பொட்டு வைத்து செய்யும் இந்த வழிபாடானது நவக்கிரக வழிபாட்டை விட மேலானதாக கருதப்படுகிறது.

அனுமனின் வாலைத் தொட்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் மனதில் நினைத்து வேண்டிக்கொள்ளும் அனைத்தும் நிறைவேறும் என்று கூறுகிறார்கள். திருமணம் நடைபெறாத பெண்கள் ஆஞ்சநேயர் வால் வழிபாடு செய்து வந்தால் பார்வதி தேவியின் அருளால் விரைவில் திருமணம் நடக்கப் பெறுபவர்கள்.

பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும். வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசியன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து `ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய' என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.

கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து தானம் கொடுக்கலாம். மேலும் அந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வழங்கலாம். அனுமன் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.

வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்குரிய முக்கிய வழிபாட்டு தினங்களாகும். ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.