தேர்தல் களத்தில் WWE த கிரேட் காளி! பிரபல கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம்!

சண்டிகார்: WWE பிரபலம் கிரேட் காளி, பாஜக.,விற்கு ஓட்டு கேட்டு மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.


WWE எனப்படும் பொழுதுபோக்கு மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்று பிரபலமானவர் கிரேட் காளி. இவர், பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 

7 அடி உயரம் உள்ள இவர் 2006ம் ஆண்டு இந்த பொழுதுபோக்கு மல்யுத்தப் போட்டிகளில் அறிமுகமானார். அப்போது, தி அண்டர்டேக்கரை துவம்சம் செய்து, WWE ரசிகர்களிடையே தனக்கென தனி செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவரது பிரபலத்தை பயன்படுத்தி, மேற்கு வங்கத்தில் பாஜக களம் இறங்கியுள்ளது.

ஆம். அங்குள்ள ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பாக, அனுபம் ஹஸ்ரா என்பவர் களமிறங்கியுள்ளார். இவரை எதிர்த்து, ஆளுங்கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக,  பெங்காலி நடிகை மிமி சக்ரவர்த்தி போட்டியிடுகிறார். இவர் பெங்காலி சினிமா ரசிகர்களிடையே பிரபலமான நடிகை ஆவார். இதுதவிர, சிபிஎம் கட்சி சார்பாக கொல்கத்தாவின் முன்னாள் மேயரும், பிரபல வழக்கறிஞருமான பிகாஷ் பட்டாச்சார்யா போட்டியிடுகிறார். இந்த 2 பேருமே நட்சத்திர அந்தஸ்து பெற்ற வேட்பாளர்கள் என்பதால், போட்டியை சமாளிக்க, அனுபம் ஹஸ்ரா புது தந்திரத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்படியே, கிரேட் காளியை பிரசாரத்திற்கு அழைத்து வந்துள்ளார். அவரும் திறந்த ஜீப் ஒன்றில் நின்றபடி அனுபம் ஹஸ்ராவை தனது சகோதரர் போல நினைப்பதாகக் கூறி, வாக்கு சேகரித்து வருகிறார். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருந்தாலும், இதெல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது சந்தேகமே...