ஒரே வாரத்தில் ரூ.125 கோடி வசூலா? விஸ்வாசம் விநியோகஸ்தர் கழுத்தை பிடித்த தயாரிப்பாளர்!

விஸ்வாசம் படம் ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறிய அப்படத்தின் விநியோகஸ்தர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.


கடந்த பத்தாம் தேதி பேட்ட மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. விஸ்வாசம் படத்தை விட பேட்ட படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. இதனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் பட தயாரிப்பு மற்றும் விநியோக உரிமை பெற்றநிறுவனங்கள் இடையே கடும் பனிப்போர் நிலவி வந்தது. இந்த நிலையில் ஆன்லைன் டிராக்கர்சுக்கு பணம் கொடுத்து பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிக வசூல் என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது.

   பேட்ட படத்தை விட விஸ்வாசம் தமிழகத்தில் அதிகம் வசூல் என ட்விட்டரில் பதிவிடும் ஆன்லைன் டிராக்கர்சுக்கு அஜித்தின் பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலமாக விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை பெற்ற கோட்டபாடி ராஜேஸ் செட்டில் செய்ததாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழகத்தில் விஸ்வாசம் படம் ஓடிய திரையரங்குகள் பேட்ட படத்திற்கு மாறுவதாக ரஜினியின் பி.ஆர்.ஓ ஆதாரத்துடன் ட்விட்டரில் தகவலை பதிவிட்டார். இந் தகவலால் கோபம் அடைந்த கோட்டபாடி ராஜேஸ் ரஜினியின் பி.ஆர்.ஓவிடம் சண்டைக்கு சென்றார்.

   ஆனாலும் அதன் பிறகும் டிராக்கர்ஸ் விஸ்வாசம் வசூல் குறித்து உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டு வந்ததாக கூறப்பட்டது. இதனால் பொங்கி எழுந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேட்ட படம் வெளியான ஒரே வாரத்தில் தமிழகத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலை கிராஸ் செய்துவிட்டதாக அறிவித்தது. அடுத்த சில மணி நேரங்களில் விஸ்வாசம் விநியோகஸ்தர் கோட்டபாடி ராஜேஸ் எட்டே நாளில் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.125 கோடியை வசூலித்ததாக அறிவித்தார்.

   ஆனால் கோட்டபாடி ராஜேஸ் அறிவிப்பை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. அதுநாள் வரை ராஜேஸிடம் பணம் வாங்கிக் கொண்டு விஸ்வாசம் வசூலை அதிகரித்து கூறிய ஆன்லைன் டிராக்கர்ஸ் கூட ராஜேஸ் ட்வீட்டை பெரிதுபடுத்தவில்லை. அதே போல் அந்த ட்வீட்டை விமர்சிக்கவும் இல்லை. ஆனால் சினிமாதுறையில் நீண்ட கால வர்த்தகம் செய்து வரும் விநியோகஸ்தர்கள் பலரும் கோட்டபாடி ராஜேஸை கண்டித்தனர்.

   வெறும் 500 திரையரங்குகளில் கூட வெளியாகாத விஸ்வாசம் படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக விநியோகஸ்தர் கோட்டபாடி ராஜேஸ் கூறியிருப்பது பயங்கர காமெடி என்று வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தனர். இதனிடையே 125 கோடி ரூபாய் வசூலானது எப்படி என்று தயாரிப்பாளர் தரப்பு விநியோகஸ்தரை நெருக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

   ஏனென்றால் விஸ்வாசம் படத்தின் தமிழக உரிமையை 40 கோடி ரூபாய்க்கு கோட்டபாடி ராஜேஸ் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது எட்டே நாளில் 125 கோடி ரூபாய் வசூல் என்று தெரிவித்துள்ளார். திரையரங்க உரிமையாளர்களின் பங்காக 20 முதல் 30 சதவீதம் சென்றால் கூட விநியோகஸ்தர் கோட்டபாடிக்கு சுமார் 30 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் வருகிறது. இதனால் கணக்கு வழக்குகளை ஒப்படைக்கும் படி தயாரிப்பாளராக சத்யஜோதி பிலிம்ஸ் கோட்டபாடிக்கு உத்தரவு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

   இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கோடப்பாடியிடம் எப்படி எட்டு நாளில் 125 கோடி வசூல் என்று கேட்ட போது, அவர் பதில் அளிக்க முடியாமல் ஏதேதோ கூறினார். இதனால் எட்டு நாளில் விஸ்வாசம் 125 கோடி வசூல் என்பது வடிகட்டிய பொய் என்பது மட்டும் நிரூபணம் ஆகியுள்ளது. மேலும் இந்த விவகாரத்தால் தயாரிப்பாளர் தரப்புக்கும் விநியோகஸ்தர் தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது.