விஷ்ணு கார்த்திகை: "பாஞ்சராத்ர தீபம்' என்ற பெயரில் விஷ்ணு கோயில்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
விஷ்ணு கார்த்திகை தெரியுமா? சகல ஐஸ்வர்யங்களும் தரும் விஷ்ணு தீபம்!

கார்த்திகை தீபத்தையொட்டி மூன்று நாள்களும் "சொக்கப்பனை' எரிக்கும் வழக்கம் உண்டு. ஒருமுறை கலைமகளுக்கு தெரியாமல் பிரம்மன் யாகம் ஒன்றினை நடத்தினார். அதனால் கோபம் கொண்ட கலைமகள், பிரம்மனின் யாகத்தை அழிக்க ஓர் அரக்கனை ஏவினாள். அரக்கன் யாகத்தைத் தடுக்க உலகம் முழுவதும் இருள் சூழும்படி செய்தான்.
இதனால் பிரம்மனின் யாகத்திற்கு தடை ஏற்படும் நிலை ஏற்பட்டது. உடனே, பிரம்மன், மஹாவிஷ்ணுவை வேண்டினார். மஹாவிஷ்ணு ஜோதியாய் ஒளிர்ந்து உலகத்தில் சூழ்ந்த இருளை அகற்றினார். மஹாவிஷ்ணு ஒளிகொடுத்த இந்த நிகழ்ச்சி நடந்தது, விஷ்ணு தீபம் 3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை விஷ்ணு தீபம் என அழைப்பர்.
தென்கொள் திசைக்குத் திலகமாய் திருமாலிருந்த மலை என ஆழ்வார் பொதுமக்கள் போற்றிப் பாராட்டிய பெருமைக்குரியது திருமாலிருஞ்சோலை எனும் அழகர்மலை. கள்ளழகர் கோவில் என்றும் அழைப்பர். வருடம் முழுவதுமே விழாக்கள் உற்சவங்கள் என கொண்டாட்டங்களுடன் கூடிய அற்புதமான கோயில் இது.
சங்கு, சக்கரம், வில், வாள், கதை என ஐந்து ஆயுதங்களூடன் இங்கே சேவை சாதிக்கும் கள்ளழகரை ஒரு முறை பார்த்தாலே போதும், நம் மனங்களை எல்லாம் கொள்ளை கொண்டு விடுவார் சுவாமி அத்தனை அழகு.
விஷ்ணு கார்த்திகை தீபம் என்றெல்லாம் சொல்லப்படும் திருக்கார்த்திகை தீப நாளில் கள்ளழகரை தரிசித்தால் பெரும் பேறு கிட்டும். அன்றைய தினம் கோயிலில் தீபங்கள் அணிவகுத்து நிற்கும். அதன் ஒளிகள் கைகோர்த்து பிரகாசமாக ஜொலிக்கும். தீபத் திருநாளில் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கூடி வரும் என்கிறார்கள்.
இத்திருநாளில் தாயார் கல்யாண சுந்தரவல்லி தாயாரை தரிசித்து கருவறை சன்னதியில் உள்ள திருவிளக்குக்கு நெய் வழங்கி கஸ்தூரி மஞ்சளால் அர்ச்சனை செய்ய தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும். தீயன விலகி நன்மைகள் வந்து சேரும். வினைகள் போக்கும் விஷ்ணு கார்த்திகை தீபம் என்பது நம்பிக்கை.