வைரல் ஹாஷ்டாக் இந்தி தெரியாது போடா விவகாரத்துக்கு எதிர்ப்பு.! மொழியின் பெயரால் தமிழர்களை தூண்டிவிடலாமா..?

இப்போது எவ்வித காரணமும் இல்லாமல் இந்தியை எதிர்த்து டீசர்ட் போடுவது ஃபேஷனாகியுள்ளது. இதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் கதிர்வேல் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கை பதிவு இது.


ஐ டோன்ட் நோ ஹிந்தி.. ஐ டோன்ட் ஸ்பீக் ஹிந்தி.. வரிசையில் அடுத்தது ஐ ஹேட் ஹிந்தி வர ரொம்ப நாள் ஆகாது. இது ஆபத்தான போக்கு. இப்போது தடுக்க தவறினால் , எதில் போய் முடியும் என்று யாராலும் சொல்ல முடியாது.

இந்தி திணிப்புக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது. கிழக்கு பாகிஸ்தான் மீது உருது திணிப்பால் வங்க தேசம் உருவானது. வடகிழக்கில் சிங்கள திணிப்பால் இலங்கை பெரும் விலை கொடுக்க நேர்ந்தது. சமீபகால வரலாறு. 

அதிகாரபூர்வமாக அமல்படுத்தும் மொழி திணிப்புக்கும், ஆர்வக் கோளாறால் தனிநபர்கள் செய்யும் அத்துமீறலுக்கும் வித்யாசம் உண்டு. இன்று காண்பவை இரண்டாம் வகை.

ஏர்போர்ட்டில் கனிமொழிக்கு நேர்ந்த அனுபவம் தவிர்த்து இருக்க வேண்டியது. விஐபி என்று தெரிந்ததும் பெண் அதிகாரி வார்த்தைகளை அளந்து பேசி இருக்கலாம். தவறுதான். ஆனால் நமது எம்.பி அந்த விசாரிப்பை மிகைப்படுத்தி விட்டார். 

“ஏன் மேடம்.. அதுவும் இந்திய மொழிதானே? என்று கேட்டேனே தவிர, நீங்கள் இந்தியரா? என்றெல்லாம் கேட்கவில்லை” என்று விசாரணையில் அதிகாரி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். ஏனைய சாட்சியங்கள், விடியோ ஆதாரங்கள் வழியாக விசாரணை அதிகாரியும் ஊர்ஜிதம் செய்திருக்கிறார். 

விமான போக்குவரத்து அமைச்சகம் அந்த விசாரணை அறிக்கையை வெளியிட்டதும் கனிமொழி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. அதோடு விட்டுவிட்டார். அதிகாரி வாக்குமூலத்தை ஏற்றுக் கொண்டால், முதலில் தான் சொன்னதை பொய் என ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும். வாக்குமூலத்தை மறுத்தால் விவகாரத்தை மேல் விசாரணைக்கு கொண்டு செல்ல நேரிடும். அது இன்னும் பெரிய சங்கடங்களுக்கு கதவு திறக்கும். அந்த இடத்தில் ஒரு சாமர்த்தியமான அரசியல்வாதியாக நடந்து கொண்டார். அதை குற்றம் சொல்ல வழியில்லை.

ஆனால், தனி நபர்கள் (அரசியல், நிர்வாக பொறுப்புகளில் இருந்தாலும்) அத்துமீறலை சீரியசாக எடுத்துக் கொண்டு, அவர்களை தாண்டி அந்த மொழியை உதை பந்தாக மாற்றி விளையாட ஆரம்பித்தால், அது விபரீதமாக வாய்ப்புகள் அதிகம். தவறு செய்பவர்கள் எல்லா பக்கமும் இருக்கிறார்கள். அவர்களை பொதுவாக்கி ஸ்டீரியோடைப் செய்வது நாகரிகமான செயல் அல்ல. 

ஓசி பிரியாணி கேட்டு கடையை அடித்து நொறுக்கினார்கள் என்று செய்திகள் வருகிறது. சொல்லிவைத்த மாதிரி அவர்கள் திமுகவுடன் சம்பந்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள். “திமுகவினர் வராதீர்கள்!” என்று பிரியாணி கடைக்காரர்கள் போர்டு வைத்தால் உடன்பிறப்புகள் மனம் புண்படாதா, சொல்லுங்கள்.

காவிரி பிரச்னையில் கன்னடர்களுக்கும், கிருஷ்ணா பிரச்னையில் தெலுங்கர்களுக்கும், முல்லை பெரியார் விவகாரத்தில் மலையாளிகளுக்கும் தமிழக அரசு மேலும் கட்சிகள் மீதும் கோபம் வருவது வாடிக்கை. அதை த்மிழ் மீது திருப்பினால் நமது ரத்தம் கொதிக்கும்தானே? நாமும் அவர்களின் மொழியை இதுவரை அவமதிக்கவில்லை. பண்பாடு காக்கிறோம்.

இதை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் மொழியால் அல்ல, மொழியின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள். இந்தியாவை துண்டுபோட துடிக்கும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் துண்டு விரிக்க தயங்காதவர்கள். 

திமுக அப்படிப்பட்ட கட்சி அல்ல. இந்தியாவுக்கு சோதனை ஏற்பட்ட ஒவ்வொரு காலகட்டத்திலும் தேசிய உணர்வை முன்னிறுத்தி குரல் எழுப்பி தன்னை அடையாளம் காட்டிய இயக்கம். அதன் நிர்வாக பொறுப்பில் புதிதாக வந்தவர்களுக்கு அந்த வரலாறு தெரிந்திருக்க நியாயம் இல்லை. எனவேதான் டீ-ஷர்ட் வாசகத்தால் பரவசப்பட்டு நன்றி சொல்கிறார் கனி. போடா என்பது மரியாதைச் சொல் என்று புது இலக்கணம் வகுக்கிறார் உதய்.

மொழியின் பெயரால் மக்களின் உணர்ச்சியை தூண்டிவிடுவது சுலபம். ஆனால், தூண்டியவர்களே அடக்க முடியாத அளவுக்கு அது பெருந்தீயாக மாறும்போது எல்லோரையும் அழித்து விடும். 1960 களில் நடந்தது இயற்கையான எழுச்சி. 60 ஆண்டுகளுக்கு பிறகு அதற்கான வாய்ப்புகள் குறைவு. செயற்கையான எழுச்சியில் ஆதாயம் கிட்டாது. இழப்புதான் மிச்சமாகும். வரப் போகும் தேர்தலுக்கு மொழியை முக்கிய பிரசார ஆயுதமாக கையில் எடுப்பதற்கான அச்சாரம் இது என்றால், கொரோனா வைரசால் வாழ்க்கையில் பிடிப்பை இழந்து தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகிவிடும். 

துரை முருகனும் பாலுவும் உயரத்தில் இருந்து இந்தியாவை பார்க்கும் வாய்ப்பு பெற்றவர்கள். அணைக்காமல் தூக்கி எறிந்த சிகரெட் கனல் சிலருடைய ஊதுகுழலால் எப்படி காட்டுத்தீயாக மாறி பேரழிவுக்கு இட்டுச் சென்றது என்பதை பல மாநிலங்களில் பார்த்தவர்கள். அவர்கள் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லி, தமிழகத்தில் விஷத்தை பரப்பும் முயற்சிக்கு திமுக இரையாகாமல் தடுப்பார்கள் என்று நம்புவோம்.