பிள்ளையாரின் துதிக்கையில் சிவலிங்கம்! ஏன் தெரியுமா?

பொதுவாக விநாயகர் என்றால் அவரது திருக்கரத்தில் அங்குசம் பாசம் அபயம் தவிர மற்றொரு கையில் கொழுக்கட்டை லட்டு ஏதேனும் கனி இப்படி ஏதாவது ஒன்று இருக்கும்.


துதிக்கையில் கும்ப கலசம் மலர் என்று வைத்திருப்பார், அல்லது இல்லாமலும் இருப்பது உண்டு. ஆனால் வித்தியாசமாக தனது துதிக்கையில் தன் தந்தையான சிவபெருமானின் லிங்கத் திருமேனி அமைந்த வடிவில் காட்சி அளிக்கும் ஆனைமுகனின் அரிய தரிசனம் கிடைக்கும் அற்புதத் திருத்தலம் மதுரையில் உள்ள வண்டியூர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் பொழுது கள்ளழகர் வைகையில் இறங்கிய பின்பு வண்டியூரில் உள்ள வீரராகவப் பெருமாள் கோவிலுக்கு எழுந்தருளி அன்றிரவு அங்கேயே தங்கி செல்வது வழக்கம். அப்போது மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தருளும் வைபவம் கோலாகலமாக நடைபெறும். இந்த புராண சம்பவத்தை எடுத்துச் சொல்லும் வண்ணம் இவ்வூர் தொன்றுதொட்டு மண்டியூர் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் வண்டியூர் என மருவி விட்டது. இந்த ஊரில் வைகையின் வடகரையில் ஊருக்கு மத்தியில் கிழக்கு பார்த்த வண்ணம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

கருவறை மூலவரான சித்தி விநாயகர் துதிக்கையில் லிங்கேஸ்வரர் உருவம் இருப்பதால் மகாமண்டபத்தில் பலிபீடத்தை அடுத்து நந்தி தேவர் வாகனம் உள்ளது. இங்கே தான் விநாயகப் பெருமான் லிங்கத்திருமேனி அமைந்த துதிக்கையுடன் காட்சி அளிக்கிறார். சித்தத்தில் நினைத்து வேண்டுவதை ஈடேற்றி வைப்பதால் சித்தி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த தும்பிக்கையானிடம் நம்பிக்கையோடு கோரிக்கை வைத்தால் நல்லன யாவும் நடக்கும். கைநழுவிப் போன சொத்துக்கள் திரும்பக் கைக்கு வந்து சேரும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

இது தவிர நினைத்த காரியம் கைகூடவும் பக்தர்கள் தங்கள் கோரிக்கையை சித்தி விநாயகரிடம் வைக்கின்றனர். அவர்கள் வேண்டியது விரைவில் நிறைவேறி மனக்கவலை அடியோடு நீங்கி விடுகிறதாம்.

கோயிலுக்கு வெளியே வாசலில் வடக்குப்புறம் தீர்த்தக் கிணறு ஒன்று உள்ளது. கடுமையான கோடை காலத்தில் ஊர் மக்கள் பலரும் இந்த நீரை பயன்படுத்தும் அளவுக்கு வற்றாத கிணறாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.

படிப்பில் கூடுதல் மதிப்பெண் பெறவும், பதவி உயர்வும் வேண்டியும் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகள் கூடிய விரைவில் முடிந்து சாதகமான தீர்ப்பு கிடைக்க வேண்டியும் பக்தர்கள் பலரும் நாளும் இத்தலத்தை வந்து நம்பிக்கையோடு வணங்கிச் செல்கின்றனர்.