சாலை இல்லை! ஆம்புலன்ஸ் வர மறுப்பு! சடலத்தை டோலி கட்டி தூக்கிச் சென்ற பரிதாபம்! பின்னால் வந்த கர்ப்பிணிக்கு நேர்ந்த விபரீதம்!

வாணியம்பாடியில் நெக்னா மலைப்பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை டோலி கட்டி மலைகிராம குடிமக்கள் தூக்கி செல்லும் அவலம் நடைபெற்றுள்ளது.


வாணியம்பாடியில் நெக்னா மலை கிராமம் அமைந்துள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட இதுவரை சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலை கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 

அதாவது இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின்சார வசதி, கல்வி வசதி உள்ளிட்ட வசதிகள் எதுவுமே இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த மலைக் கிராமத்தில் ஒரே ஒரு துவக்கப்பள்ளி உள்ளது. அதுவும் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே அங்கு கற்பிக்கப்படுகிறது . அந்த பள்ளியிலும் வாரத்திற்கு மூன்று முறை தான் ஒரே ஒரு ஆசிரியர் வந்து குழந்தைகளுக்கு பாடம் கற்பித்து தருவாராம். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

போதிய வசதிகள் எதுவுமே இல்லாததால் இந்த மலை கிராம மக்கள் அருகில் இருக்கும் நகரங்களில் சென்று தங்களுடைய வாழ்க்கை பிழைப்பிற்காக கிடைக்கிற வேலையை செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த மலைக் கிராமத்தை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் முனுசாமி என்கிற ரஜினி (வயது 27) ஆவர். இவருக்கு அனிதா என்பவருடன் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். தன் மனைவி குழந்தைகளுடன் ரஜினி கோவையில் தங்கி கட்டிட வேலை பார்த்து வருகிறார்.  

அப்படியாக நேற்றைய தினம் புதிதாக கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தில் இருந்து சென்ட்ரிங் பிரித்தபோது மின்சாரம் தாக்கி பரிதாபமாக ரஜினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பின்னர் ரஜினியின் உடலை சொந்த ஊரான நெக்னா மலை கிராமத்திற்கு கொண்டு வந்தனர். சரியான சாலை வசதி இல்லாத அந்த மலை கிராமத்தில் இறந்தபோன ரஜினியின் உடலை அங்கிருந்த மக்கள் டோலி கட்டி மலை மீது தூக்கி சென்றனர்.

இதைப் பார்த்தபோது காண்போர் நெஞ்சம் பதைபதைத்தது என்றுதான் கூற வேண்டும். அது மட்டுமில்லாமல் தன் கணவரின் இறப்பை தாங்காத அவரது மனைவி அனிதா, மலைமீது செல்லும்போது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அங்கிருந்த மற்றவர்கள் அவரையும் வேறொரு டோலியில் கட்டி அவர்களது கிராமத்திற்கு தூக்கி சென்றனர்.

இந்த அவல நிலையை அடுத்து அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான மின்சார வசதி, சாலை வசதி, கல்வி வசதி ஆகிய அடிப்படை வசதிகளை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.