கால்கடுக்க காத்திருக்கும் காவலர்கள்..! பிரியாணி விருந்து வைத்த விஜய் ரசிகர்கள்! நெகிழ வைத்த நிகழ்வு!

புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த மாவட்டத்தில் இரவு பகலாக உழைத்து வரும் காவல்துறை நண்பர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கி அசத்தியுள்ளார்கள்.


சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக அளவில் பல்வேறு நாடுகளில் பரவ ஆரம்பித்து கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை காப்பதற்காக மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இந்த ஊரடங்கில் மருத்துவர்கள் மற்றும் போலீஸ், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினர் இரவு பகல் பாராமல் அயராது மக்களுக்காக உழைத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை தடுக்க மருத்துவர்களுக்கு அடுத்தபடியாக ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக கடைபிடிக்க காவல்துறையினரே இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.

அவ்வாறு உழைத்து வரும் காவல்துறை நண்பர்கள் கிடைத்த உணவை உண்டு பசியை ஆற்றிக் கொண்டு அயராது உழைக்கிறார்கள். ஆகவே காவல்துறை நண்பர்களுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என்ற முடிவெடுத்து புதுக்கோட்டை சார்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் 200 பிரியாணி பொட்டலங்களை அந்த மாவட்டத்தில் உள்ள காவல்துறை நண்பர்களுக்கு அளித்து அசத்தி உள்ளனர்.

இதுபற்றி பேசிய விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் பர்வேஸ் அவர்கள், மக்கள் ஊரடங்கை சரியாக கடைபிடிக்க காவல்துறையினரே தினமும் சாலையில் நின்று நமக்காக போராடி வருகிறார்கள். எனக்கு தெரிந்த சில போலீஸ் நண்பர்களிடையே கேட்டபோது சாப்பாடு நேரத்திற்கு கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது. கிடைக்கும் சாப்பாட்டைதான் சாப்பிட வேண்டும். பிரியாணி எல்லாம் சாப்பிட்டு நீண்ட நாட்களாகி விட்டது எனவும் அவர்கள் கூறினார்கள் . 

அப்போதுதான் காவல்துறை நண்பர்களுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என்று நாங்கள் முடிவு எடுத்தோம் எனவும் அவர் கூறினார். பின்னர் அவர்களுக்காக 200 பிரியாணி பொட்டலங்களை தயார் செய்து ட்ராபிக் போலீஸ், கணேஷ் நகர் ஸ்டேஷனில் உள்ள போலீசார்களுக்கு மேலும் மற்ற இடங்களில் உள்ள போலீஸ் நண்பர்களை தேடி சென்று அவர்களுக்கு பிரியாணி பொட்டலம் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொடுத்தோம். அவர்களும் மகிழ்ச்சியாக வாங்கிக் கொண்டார்கள் எனவும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.