திருப்பி அடித்த தனுஷ்! மிரட்டிய வெற்றிமாறன்! அசுரன் திரைப்பட விமர்சனம்!

தியேட்டருக்கு படம் பார்க்க எதுக்கு போறோம்? ஒரு ரெண்டுமணி நேரம் நாம வேற சில மனிதர்களோட வாழ்க்கையை பக்கத்துல உக்காந்து பார்த்துட்டு வரணும்னுதான்.


அந்தப்படம் நம்மள ஆச்சரியப்படுத்தலாம். பயமுறுத்தலாம். நரம்பு முறுக்கேற வைக்கலாம். குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கலாம். சிரிக்க வைக்கலாம். நம்மையும் அறியாம நம்மள அழவைக்கலாம். இதெல்லாம் ஒரே படத்துல நடக்கணும்னு அவசியம் இல்ல. ஆனா அப்படி நடந்தா அது அசுரன் படம் மாதிரிதான் இருக்கும். 

கோவில்பட்டி எங்க ஊர்ல இருந்து 40 கிமீ. கரிசல் மண்ணு. பருத்தி விளையற பூமி. அந்த நிலப்பரப்பு மழைக்கு ஏங்கி நிற்கிற ஒரு காலமும் உண்டு. பேய்ஞ்சது போதும்னு சொல்ற காலமும் உண்டு. வெயில் சுள்ளுன்னு மூஞ்சியில அடிக்க, கருவேலமரம் சூழ்ந்த அந்த கம்மாக்கரையில உக்காந்து திருட்டு தம் அடிச்ச ஞாபகங்கள் நிறைஞ்சி கிடக்கு. ஆள காணோம்னு காலையில வெள்ளன தேட ஆரம்பிச்சா, மத்யானம் சாப்பாட்டுக்கு அவனா வீட்டுக்கு வர்றப்போதான் கண்டுபிடிக்கவே முடியும்.

அப்படி இருந்த பூமி அது. காலப்போக்குல காணாமப்போன விஷயங்கள் எல்லா இடத்துலயும் போல இங்கயும் உண்டு. ஒரு ரெண்டரை மணி நேரம் என்னோட ஊர்ல, என்னோட ஏரியால வாழ்ந்துட்டு வந்தேன் இந்த படம் பார்த்து. இதைவிட எளிமையா இந்த படத்தை பத்தி நான் எப்படி சொல்ல?

எல்லாத்தையும் அப்படியே ஏத்துக்கிட்டு வாழ்ந்துருவோம்ன்னு இருக்குற சனங்க. சாதியையும் கூட அப்படியே ஏத்துக்கிட்டவங்க. அது எவ்ளோ பெரிய தப்புன்னு உரைக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் இழந்து அடிமையாகி போனதுதான் மிச்சம். வெற்றிமாறன் படங்கள்ல இந்த சாதி கட்டமைப்பு ரொம்ப நுண்ணியமான முறையில படம் முழுக்க சொல்லப்பட்டிருக்கும்.

ஆனா எங்கயும் என்ன சாதி, என்ன மாதிரியான அமைப்புங்கிறதை வெளிப்படையா சொல்லமாட்டார். ஆனா இந்தப்படத்துல அவர் அதை ரொம்ப அழகா மீறியிருக்காரு. அந்தவகையில இது வெற்றிமாறனோட அடுத்த பாய்ச்சல்ன்னு உறுதியா சொல்லலாம். வடசென்னையில இருக்குற குப்பத்து மக்கள், ஆடுகளத்துல கருப்பு வாழுற இடம், பார்க்குல தூங்கி எழுந்து, வெளிமாநில ஊர்ல கடையில வேலை பார்க்குற மனிதர்கள்ன்னு அங்கங்க அவர் குறிப்புகளா இதுவரைக்கும் நிறைய சொல்லியிருக்காரு. அது பத்தாதுன்னு அவர் புரிஞ்சிக்கிட்டது நல்லா தெரியுது. 

தனுஷ். அவர் கதறி அழுற ஒரு காட்சி படத்துல உண்டு. இயலாமை ரொம்ப பெரிய துயரம். அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலையாலயும், தன்னோட குடும்பத்தை பத்திரமா வச்சிருக்கணும்ங்கிற எண்ணத்தால வர்ற இயலாமைன்னா அது இன்னும் துயரம். அந்த துயரம் ஒரு ஓலமா வெளிய வெடிச்சி வர்ற அந்த தருணம் நான் கலங்கிப்போய்ட்டேன்.

ஒரு அப்பனா ஒருத்தன் தோத்துட்டோம்னு நினைச்சாலே பதறும். அதை தனுஷோட நடையிலே பார்த்தேன். இந்தியன் படத்துல தாத்தா கமல் அந்த டிவி ஸ்டேஷன்ல மெல்ல நடந்து நிழல்கள் ரவி கிட்ட போற ஒரு காட்சி இருக்கும். அதையே கொஞ்சம் வேகமா ஆனா நோக்கமில்லாம இருக்குற ஒரு நடை தனுஷ் உடல்மொழியில இந்தப்படத்துல உண்டு. அந்த அடர்த்தியான தாடி மீசைக்குள்ள இருந்து கடைசியா ஒரு அகலமான புன்னகை ஒன்னு வரும். அதுதான் தனுஷ் அவரை ஆ-ன்னு ரசிச்சிட்டிருந்த நமக்கு கொடுத்த விருது. 

மஞ்சு. அந்த கொத்து முடி தலையில இருந்து கீழ இறங்கி கண்ணை மறைச்சி தொங்கும். அவங்க அழகும், அந்த தோரணையும் என் மனசை ஆக்கிரமிக்க மாதிரி அந்த முடி முகத்தை ஆக்கிரமிச்சிருக்கும். நீ என் புள்ளைகளை நல்லா பார்த்துப்பன்னு அவங்க தனுஷை பார்த்து சொல்றதை விட, இவங்க நல்லா பார்த்துப்பாங்கடான்னு தனுஷுக்கு அவங்கள பார்த்ததுமே கூட தெரிஞ்சிருக்கலாம். முன்கதையே தேவையில்லை. நிறைய தமிழ்ல நடிங்க மஞ்சு.