கொரோனா தடுப்பூசி..! தாமாக முன்வந்து ஊசி போட்ட பெண் சில நிமிடங்களில் மரணம்..? வெளியான அதிர்ச்சி தகவலின் உண்மை பின்னணி!

சோதனை முன்னோட்டமாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தன்னார்வல பெண்மணி உயிரிழந்தார் என்று இணையத்தில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தற்போது நலமுடன் உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் பாரபட்சமின்றி உலகம் முழுவதும் தன்னுடைய கோரத் தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்த வைரஸின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு முறையான மருந்து இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. எப்பொழுது இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும் என உலக மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இணைந்து மூன்று மாத காலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டறிந்தனர்.

இந்த தடுப்பு மருந்தை நேரடியாக நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு முன்பாக மனிதர்களின் உடம்பில் செலுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியிருந்தனர். இதனால் இங்கிலாந்தில் உள்ள தன்னார்வலர்கள் பலரும் இந்த சோதனை முயற்சியில் ஈடுபட தாமாக முன்வந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டின் தன்னார்வலராக இருந்து வரும் இளம்பெண் எலிசா கிரனாடோ, முதலில் கொரோனா தடுப்பு மருந்து செய்து கொள்ள ஒப்பு கொண்ட முதல் பெண்மணியாவார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவரது உடலில் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தினர். கொரோனா தடுப்பு மருந்தை உடலில் ஏற்றுக் கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எலிசா , "நான் ஒரு விஞ்ஞானி, எனவே நான் எங்கு வேண்டுமானாலும் அறிவியல் செயல்முறையை ஆதரிக்க முயற்சிக்க விரும்புகிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது." 

இந்நிலையில் மருந்து செலுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர் எலிசா பரிதாபமாக உயிரிழந்தார் என இணையத்தில் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இதைக் கேள்விப்பட்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் எலிசா கிரனாடோ இறந்துவிட்டார் என இணையத்தில் வெளிவந்த செய்தி தவறானது என்றும் அவர் நலமாக உள்ளார் எனவும் அந்த நாட்டின் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அறிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புபவர்களை எச்சரித்தும் அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் எலிசா கிரனாடோ தாம் நலமுடன் இருப்பதாகவும் அவரே விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். எலிசா கிரனாடோ இறந்துவிட்டார் என்று வெளியான போலியான செய்திகள் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.