பக்தனுக்கே குழந்தையாகப் பிறந்த ஐயப்பன்! வராகபுரம் கோயில் பின்னணி!

கலியுக வரதனான ஐயப்பன் தன் பல்வேறு அம்சங்களில் ஒன்றான தர்மசாஸ்தா வடிவுடன் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பல உண்டு.


அந்த வகையில் குளத்தூரிலய்யன் தர்ம சாஸ்தா என்ற திருப்பெயரோடு பலருக்கும் குல தெய்வமாக விளங்குகிறார், கல்லிடைக்குறிச்சியில் தாமிரபரணி நதிக்கு அருகில் வராகபுரம் என்ற கிராமத்தில் கோயில் கொண்டுள்ள அய்யன். இவர் இங்கு கோயில் கொண்டதன் பின்னணி என்ன?

பல வருடங்களுக்கு முன்னர் சாஸ்தாவின் தீவிர பக்தர் ஒருவர் தன் மனைவியுடன் வராகபுரத்தில் வாழ்ந்து வந்தார். வேதத்திலும் அறத்திலும் சிறந்து விளங்கிய அவருக்கு பிள்ளை பாக்கியம் இல்லை என்பது மட்டுமே குறையாக இருந்தது. ஒரு நாள் இரவு வீட்டுக்கு விஜயம் செய்த மகான் ஒருவர் தட்சிண கேரளத்தில் ஓடும் பம்பா நதியில் நீராடிவிட்டு மலையேறி சபரி அன்னையை தரிசித்தால் உங்களுக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என அருளினார்.

அதன்படி சபரி ஆசிரமம் அடைந்து வேண்ட “உன் விருப்பம் நிறைவேறப் போகிறது, உன் வீட்டில் குழந்தை தவழ போகிறது, உன் ஊருக்கு நான் விஜயம் செய்யும் தருணம் நெருங்கி விட்டது” என அசரீரி கேட்க அந்த பக்தர் மகிழ்ச்சி பொங்க ஊருக்குத் திரும்பினார்.

பந்தள தேசத்து மன்னன் ராஜசேகரின் மனைவிக்கு ஏற்பட்ட தீராத தலைவலியைத் தீர்ப்பதற்காக மணிகண்ட சுவாமி புலிப்பால் கொண்டு வந்த அதே நாளில் வராகபுரம் கிராமத்தில் உள்ள அந்த பக்தரின் இல்லத்தில் தர்மசாஸ்தா பாலகனாக எழுந்தருளினார். அந்த பாலகனுக்கு கம்பங்கூழை ஊட்டி உறங்கச் செய்தனர் அந்தத் தம்பதி.

சிறிது நேரத்தில் படுத்திருந்த பாலகனைக் காணோம். ஆனால் அந்த வீடு முழுவதும் ஜோதி பரவியிருந்தது. அப்போது தர்மசாஸ்தாவான ஐயப்ப சுவாமி திருக் காட்சி கொடுத்து உன் வம்சத்துக்கு எப்போதும் துணையாக நிற்பேன் என அருளினார். அன்று முதல் அந்த பக்தரின் பரம்பரைக்கு கம்பங்குடி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது. தர்மசாஸ்தா எனும் சமஸ்கிருத ஸ்லோகத்தில் இதுபற்றிய குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இன்றைக்கும் அந்த வம்சத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.

சபரிகிரி வாசன் கோலோச்சும் கேரளத்தின் பல பகுதிகளிலும் கம்பங்குடி சமூகத்துக்கு சிறப்பு மரியாதைகள் செய்யப்படுகின்றன. பிற்காலத்தில் வராகபுரத்தில் தர்மசாஸ்தா கோயில் கட்டப்பட்டது. சுமார் 700 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த ஆலயத்தில் மூலவராக குளத்தூரிலய்யன் என்ற பெயரில் தர்மசாஸ்தா எழுந்தருளியுள்ளார்.

மகாகணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் திரளாக வந்து தர்மசாஸ்தாவை வணங்கிச் செல்கின்றனர்.