எம்.பி தேர்தல்! அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி குரு மகன்!

நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட காடுவெட்டி குரு மகன் கனலரசனுக்கு தூபம் போடப்பட்டு வருகிறது.


காடுவெட்டி குரு மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கும் ராமதாஸ் தரப்புக்கும் இடையே மோதல் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. காடுவெட்டி குருவின் மனைவி ராமதாஸ் அணியில் உள்ளார். ஆனால் காடுவெட்டி குருவின் மகன் மற்றும் தாயார் ராமதாசுக்கு எதிரான அணியில் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் மயிலாடுதுறையில் காடுவெட்டி குரு நினைவேந்தல் நடைபெற்றது.

   இந்த நிகழ்ச்சியை பா.ம.கவில் இருந்து நீக்கப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த வழுபூர் வி.ஜி.கே மணி என்பவர் ஏற்பாடு செய்திருந்தார். இவர் தீவிரமான குரு ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் மணியை பா.ம.கவில் இருந்து நீக்க பரிந்துரை செய்ததே குரு தான் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி கூறி வருகிறார். இந்த களோபரத்தில் பிப்ரவரி 1ந் தேதி பா.ம.கவை உடைத்து புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக மணி பேசி வருகிறார.

   இந்த புதிய கட்சியில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் காடுவெட்டி குரு மகன் கனலரசன் பெயரை கூறித்தான் கட்சிக்கு மணி ஆதரவு திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் கனலரசன் போட்டியிட உள்ளதாகவும், அன்புமணி எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து கனலரசன் களம் காணுவார் என்றும் மணி தரப்பு தெரிவித்து வருகிறது.

   இதனால் பிப்வரி ஒன்றாம் தேதி மணி தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள கட்சி மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் பா.ம.கவில் ராமதாசுக்கு அடுத்தபடியாக செல்வாக்கோடு இருந்தவர் குரு. வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை பொறுத்தவரை குரு தற்போதும் மாவீரன் தான். அந்த குரு மீதான மரியாதை அப்படியே அவருடைய மகனுக்கும் கிடைக்கும் என்பது தான் ஒரு சிலரின் கணக்காக உள்ளது.

   இந்த விஷயத்தில் பா.ம.கவில் ஓரங்கட்டப்பட்ட பழைய நிர்வாகிகள் காடுவெட்டி குருவின் மகனுக்கு ஆதரவு அளித்து வருவதாக சொல்லப்படுகிறது. வன்னியர்கள் மத்தியில் அன்புமணிக்கு உள்ள செல்வாக்கை செல்லாக்காசாக்க குருவின் வாரிசால் மட்டுமே முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் பா.ம.கவில் இருந்து பிரிந்து வந்த வேல்முருகனால் கூட அந்த கட்சியின் ஒரு செங்கலை கூட அசைக்க முடியவில்லை.

   அப்படி இருக்கையில் பா.ம.கவுடன் நேரடி தொடர்பு இல்லாத குருவின் மகனால் கட்சியை என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.