ரத்து அறிவிப்பு தற்காலிகப் பின்வாங்கல்தான் - உஷாராக இருக்கச் சொல்கிறார் திருமாவளவன்

ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தேசியக் கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டாலும் தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறியுள்ளது. மாநில அரசின் இன்றைய ரத்து அறிவிப்பு ஒரு தற்காலிகப் பின்வாங்கலே என்றும் அக்கட்சி கருத்துத் தெரிவித்துள்ளது.


வி. சி. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இக்கருத்து வெளிப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். இந்த ஆண்டுக்கு மட்டும் அன்றி எதிர்வரும் ஆண்டுகளிலும் இந்தப் பொதுத்தேர்வை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்துகிறோம். 

மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கை இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அந்தக் கல்விக் கொள்கையின் அங்கமாகவே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் முன்னோட்டமாக அறிவிக்கப்பட்டது. மக்களின் எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக தற்போது தமிழக அரசு தனது முடிவிலிருந்து பின் வாங்கியுள்ளது. இது தற்காலிகமான பின்வாங்குதல் என்றே தோன்றுகிறது. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் மீண்டும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தமிழக அரசு அறிவிக்கும் ஆபத்து உள்ளது. தேசிய கல்விக்கொள்கையில் அவ்வாறு அறிவிக்கப்பட்டாலும் "நாங்கள் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த மாட்டோம்" எனத் தமிழக அரசு உறுதியளிக்க வேண்டும்.    

ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளால் பள்ளிக்கல்வியில் "இடைநிற்றல்" அதிகரித்து குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருகும். இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் எஸ்சி ,எஸ்டி மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப் படுவார்கள். இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் படிக்கக் கூடாது என்ற வர்ணாசிரம கோட்பாட்டை நடைமுறைப் படுத்தும் விதமாகவும், அவர்களது கல்வி கனவைக் கருக்கும் உள்நோக்கத்தோடும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வருகிறது. இதற்குத் தமிழக அரசு உடந்தையாக இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 

சூத்திரர்கள் படிக்கக் கூடாது என்ற வேதகால நடைமுறையைத் திணிக்க நினைக்கும் சனாதன சக்திகளுக்கு தமிழ்நாட்டில் ஒரு போதும் இடம் கிடையாது என்பதை வலுவாக தெரிவிக்க வேண்டிய நேரம் இது . தமிழக அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கல்விக் கொள்கையில் தனது நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று திருமா கூறியுள்ளார்.