2ஜி ஸ்பெக்ட்ரம் தரகர்! கனிமொழி டூ ரத்தன் டாடா! நீரா ராடியாவின் ஹாஸ்பிடலை திறந்து வைத்த யோகி ஆதித்யநாத்!

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்ட நீரா ராடியாவின் புதிய நடமாடும் மருத்துவமனையை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


குற்றவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மருத்துவமனையை முதலமைச்சரே திறந்து வைத்ததாக சமூகவலைதளங்களில் சர்ச்சை பொருளாக மாற அந்த விழாவின் புகைப்படங்கள் யோகி ஆதியநாத் டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

நாட்டையே உலுக்கிய ஊழல் சம்பவம் 2ஜி ஸ்பெக்ட்ரம். இந்த வழக்கில் சுமார் ரூ.1,76,000 கோடி முறைகேடு நடைபெற்றதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பின்னர் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 2007 முதல் 2009 வரை பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலருடனும் 2ஜி குறித்து நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சுமார் 5,000 தொலைபேசி உரையாடல்கள் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே 2016-ல் உத்தரப்பிரதேசத்தில் பிரமாண்ட மருத்துவமனையை தொடங்கிய நீரா ராடியா வாரணாசியில் நடமாடும் மருத்துவமனையை தொடங்கி உள்ளார். இந்த மருத்துவமனையை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைத்திருக்கிறார்.

மருத்துவமனையை தொடங்கி வைத்த புகைப்படங்கள் யோகி ஆதித்யநாத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டன. பின்னர் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையாக வெடித்த உடன் இந்த படங்கள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் நீரா ராடியா எந்த ஒரு வழக்கிலும் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என்று பாஜக தரப்பிலும், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் யோகி ஆதித்யநாத் மென்மை போக்கை கடைபிடிக்கதா காங்கிரஸ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.