அடுத்த 5 வருடத்திற்கு உத்தவ் தாக்கரே தான் முதலமைச்சர்! சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அதிரடி கருத்து!

மகாராஷ்டிராவில் அடுத்த ஐந்து வருடம் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தான் முதல் அமைச்சராக இருப்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.


மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட அஜித் பவார் ஆகியோர் தங்கள் அரசுக்கு போதிய எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தினால் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். 

இதனால் மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. முன்னதாக மகராஷ்டிரா தேர்தலில் சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு பாஜக சுழற்சி முறையில் இரண்டரை வருடத்திற்கு முதலமைச்சர் பதவி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு ஒத்துப்போகவில்லை. இதனால் சிவசேனா கட்சி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதை விலக்கிக் கொண்டது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் அவர்கள் மகாராஷ்டிராவில் அடுத்த 5 ஆண்டுகள் சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே தான் முதலமைச்சராக இருப்பார் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது அங்குள்ள அரசியல் சூழ்நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.