ஒரு கோடி சிற்பங்களுடன் அதிசல நகரம்..! இந்துக்கள் அவசியம் காணவேண்டிய சிற்பங்கள்!

அனைத்து உயிர்களுக்கும் நேசன் ஈசன் அவன் நாட்டில் மட்டுமின்றி காடு மலைகளிலும் கோயில் கொண்டுள்ளான்


அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் உனக்கோடி மாவட்டத்தில் ஹைலா ஷா ஹரி என்ற ஊரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மலைக்காட்டுக்கு நடுவில் வழிபடப்படுகிறான் மகேசன். கற்பாறையில் வடிக்கப்பட்ட சிவன் சிலையை தரிசிக்க அடர்ந்த காட்டுக்குள் நாம் செல்ல வேண்டும். லம்டிங் சப்ரூம் என்ற பிரிவிலிலுள்ள தர்ம நகர் ரயில் நிலையத்திலிருந்து காரில் நாற்பது நிமிடங்களில் இந்த தலத்திற்கு வந்து விடலாம். பயணத்தின்போது பாறைகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விநாயகர் உள்ளிட்ட பல தெய்வ சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

ஓரிடத்தில் பாறையின் உச்சிக்குச் சென்று சிதைந்துபோன படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால் உனக்கோடீஸ்வர கல்பைரவா என்று அழைக்கப்படும் சிவன் வடிவை தரிசிக்கலாம். அதன் தலைப்பகுதி மட்டும் 30 அடி உயரம் 10 அடி அகலத்தில் பிரமாண்டமாக வித்தியாசமாகக் காணப்படுகிறது. அந்த சடைமுடிக்கற்றில் கங்கை, நிலவு ஆகியவை உள்ளன.. இரு பக்கமும் இரண்டு பெண் கணதேவதைகள் நிற்கின்றன. சிவனின் முகம் முழுக்கமுழுக்க ஒரு பழங்குடித்தெய்வம் போலிருக்கிறது.

அத்தனை சிற்பங்களிலும் இந்திய மைய ஓட்ட சிற்பக்கலைக்கு முற்றிலும் அப்பாற்பட்ட வடகிழக்கின் பழன்குடித்தன்மை உள்ளது. கோகிமாவில் பார்த்த பழங்குடி வீடுகளில் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்பங்களின் அதே அழகியல். முப்பதடி உயரமான வீரபத்ரனின் முகம். இருபக்கமும் நாய்கள். இருபதடி உயரமான துர்க்கை. அவளுடைய இரு காவல் தேவதைகள்.

இவை ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அன்று இக்குன்று ஒரு முக்கியமான நகரமாக இருந்திருக்கிறது. சிவனுக்குரிய குன்று. காடு முழுக்க பல உடைந்த சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரிய பாறை ஒன்று பாதி அமிழ்ந்த நந்தியாக செதுக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சிலை ஒன்றின் தலையணி மட்டும் பாதி புதைந்து மண்ணில் கிடக்கிறது. அப்பால் அச்சிலையின் ஒற்றைக் கண்ணும் மூக்கின் ஒரு பகுதியும் ஆற்றின் கீழ் உள்ள பாறை அடுக்கில். யானைமுகம் கொண்ட பூதகணங்கள் இருபக்கமும் நிற்க அமர்ந்திருக்கும் நாற்பதடி உயரமான பிள்ளையார்.

வளைந்து மேலேறிச்சென்றால் ஒட்டுமொத்தமாக ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகளாக இச்சிற்பங்களைப் பார்ப்பது ஒரு திகைப்பூட்டும் அனுபவம். மேலே பலவகையான தாந்த்ரீகச் சிற்பங்கள் உள்ளன. யோனி விரித்த கோலத்தில் அமர்ந்த துர்க்கை. தன் தலையை தானே வெட்டும் யோகினி. தலைவெட்டுபட்ட யோகினி. துர்க்கையின் வெவ்வேறு கோலங்கள்.

உனக்கோட்டி பற்றி இரண்டு தொன்மங்கள் உள்ளன. வாராணசிக்குச் சென்றுகொண்டிருந்த சிவன் தன் ஒருகோடி பரிவாரங்களுடன் இங்கே தங்கியிருந்தார். தன்னை அதிகாலையில் எழுப்பும்படி சிவகணங்களிடம் சொன்னார். அவர்கள் தூங்கிவிட்டார்கள். ஆகவே அவர் மட்டும் கிளம்பிச்சென்றார். ஒருகோடிக்கு ஒன்று குறைவாக அங்கே சிற்பங்கள் அமைந்தன என்பது ஒருகதை

இதுவே இங்குள்ள இந்து மையமதத்தின் புராணம். இங்குள்ள இந்துமதம் என்பது அசாம், வங்காளம், ஒரியா வரை விரிந்து கிடக்கும் சாக்த மரபின் ஒரு வடிவம் ஆகும். இன்றும் திரிபுரா சாக்த பாரம்பரியம் கொண்டது. சாக்தத்தின் ஒருபகுதியாகவே சைவம் கருதப்படுகிறது

இன்னொரு தொன்மம் இங்குள்ள பழங்குடிகளுடையது. கல்லு கும்ஹார் என்ற குயவர் குலத்துச் சிற்பி இதைச் செதுக்கினார். அவர் பார்வதியின் பரமபக்தர். கைலாசத்துக்கு செல்ல அவர் விரும்பினார். பார்வதியும் சிவனிடம் அதை வற்புறுத்தினார். கல்லு கும்ஹாரிடம் சிவன் ஒரே இரவில் ஒருகோடி சிற்பங்களைச் செய்தால் கைலாயத்திற்கு அழைத்துக்கொள்வதாகச் சொன்னான். கல்லு பித்தனைப்போல வேலை செய்து அச்சிற்பங்களை செய்தார். கோடிக்கு ஒரு சிற்பம் குறைவாக இருக்கையில் விடிந்தது. சிவன் கல்லு கும்ஹாரை கூட்டிச்செல்லவில்லை உண்மையில் இவ்விரு தொன்மங்களுமே பிற்காலத்தையவை. இக்காடெங்கும் சிதறிக்கிடக்கும் பல்லாயிரம் சிற்பங்களைக் கண்டு உருவாக்கப்பட்டவை.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையான இத்தலம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது சுற்றுலாத் தலமாகவும் விளங்குவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் அசோகஸ்தமி மேளா என்றழைக்கப்படும் பெரிய திருவிழா ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.

அப்போது ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் இந்த ஈஸ்வரனையும் இதர தெய்வங்களையும் வழிபட்டுச் செல்கிறார்கள். இங்கு பூசாரி யாரும் இல்லை. பக்தர்கள் தாங்களாகவே பழங்களை நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி விட்டுச் செல்கிறார்கள். இதுதவிர ஜனவரியிலும் ஒரு திருவிழா நடைபெறும். அப்போதும் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.