தமிழக அமைச்சரவையில் பாஜக விரைவில் இடம்பெறும்! பீதி கிளப்பும் துணை முதலமைச்சர்!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின் மாநில அரசில் பாஜக முக்கிய பங்கு வகிக்கும் என்று, உத்தரப் பிரதேச துணை முதல்வர் ஆருடம் தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வராக உள்ள தினேஷ் சர்மா, சென்னையில் பாஜக அலுவலகத்திற்கு, ஆலோசனை கூட்டத்திற்காக வந்திருந்தார். இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மீண்டும் இங்கே நான் வருவேன். நான் சொல்வதை நம்புங்கள்,

இங்கே மேடையில் அமர்ந்துள்ள பாஜக நிர்வாகிகள் பலர் தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின், தமிழக அரசில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருப்பார்கள்,'' என்று குறிப்பிட்டார். 

மேலும், ''எதிர்காலத்தில் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாக பாஜக மாறும். ஜாதி, மத ரீதியான பாதிப்புகளை எதுவும் ஏற்படுத்தாமல் அனைவரையும் ஒன்றிணைத்து வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதே பாஜகவின் நோக்கம்,'' என்றும் அவர் குறிப்பிட்டார். 

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழலுக்கு நடுவே, உத்தரப் பிரதேச மாநில துணை முதல்வரின் இந்த கருத்து கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. பாஜக, தமிழகத்தில் அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறதோ, என்ற சந்தேகம்தான் அரசியல் பார்வையாளர்களிடம் நிலவுகிறது.