மாணவர்களை பிரியாணி வாங்க அனுப்பிய பள்ளி உரிமையாளர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

திருவண்ணாமலை அருகே பிரியாணி வாங்க பள்ளி நிர்வாகிகளால் இரு சக்கர வாகனத்தில் அனுப்பப்பட்ட மாணவன் உயிரிழந்ததையடுத்து அவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.


ஜவ்வாது மலையில் உள்ள அத்திப்பட்டில் புனித ஜோசப்

மேல்நிலைப் பள்ளி உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவை வளைத்துப்போட்டு இயங்கி வரும் இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் தனித் தனியாக விடுதிகள் உள்ளன. 

 

விடுதியில் தங்கி மஞ்சுநாத் என்ற மாணவர் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். ஞாயிற்றுக் கிழமையன்று பள்ளித் தாளாளர் இலியாசும், விடுதிக் காப்பாளர் லூர்துவும், மஞ்சுநாத் மற்றும் ஒரு 10-ஆம் வகுப்பு மாணவனை அழைத்து இருசக்கர வாகனத்தைக் கொடுத்து பள்ளியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜமுனாமரத்தூருக்கு சென்று பிரியாணி வாங்கி வருமாறு கூறிதாகக் கூறப்படுகிறது.

 

அவர்கள் இருவரும் பிரியாணி வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரில் வந்த டிராக்டர் ஒன்றின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மஞ்சுநாத் உயிரிழந்த நிலையில் மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

 

18 வயது நிரம்பாத மாணவர்களிடன் இரு சக்கர வாகனத்தைக் கொடுத்து பிரியாணி வாங்கி வரச்சொன்ன பள்ளி நிர்வாகிகள் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். 

 

பள்ளியில் பல பணியாளர்கள் இருக்கும் போது சிறுவர்களிடம் இருசக்கரவாகனத்தைக் கொடுத்து பிரியாணி வாங்கிவரச்சொன்ன நிர்வாகிகள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்துகின்றனர்.