தலையை வெட்டி தனியாக எடுத்துச் செல்லும் கூலிப்படை..! தென்மாவட்டத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்! பதற வைக்கும் பின்னணி!

தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கூலிப்படையை சேர்ந்த நபர்கள் அப்பாவி மக்களின் தலையை வெட்டி தனியாக எடுத்துச் செல்லும் அவல நிலை அரங்கேறி வருவது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு அருகே தலைவன்வடலி கிராமம் அமைந்துள்ளது. இங்கு பரமசிவம் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு சத்தியமூர்த்தி (வயது 22) என்ற மகன் உள்ளார். சத்தியமூர்த்தி தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் சத்தியமூர்த்தி வெளியே சென்றுள்ளார். வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

இதனையடுத்து சத்தியமூர்த்தியின் உறவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து அவரைத் தேடி ஊர் முழுக்க அலைந்துள்ளனர். அப்படியாக தேடிய பொழுது தலைவன்வடலி ஊருக்குள்ளேயே அமைந்திருக்கும் முட்புதர் சத்தியமூர்த்தியின் உடல் தலை இன்றி முண்டமாக கிடந்துள்ளது. இதனைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த அவர்கள் உடனடியாக சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அங்கிருந்த அவரது உறவினர்கள் சத்தியமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க அனுமதிக்கவில்லை.

முதலில் தலையை தேடித்தருமாறு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அடுத்து போலீசாரின் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்பு சத்தியமூர்த்தியின் உடல் கிடைத்த 400 அடி தூரத்தில் அவரது தலை வேறு ஒரு இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக சத்தியமூர்த்தியின் தலையும் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் தங்களுடைய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து உறவினர்களிடம் விசாரணை செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த பொங்கல் விழாவின் பொழுது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக ஊருக்குள் வந்த இளைஞர்களுடன் சத்தியமூர்த்தி மோதலில் ஈடுபட்டுள்ளார். இந்த முன்விரோதத்தின் காரணமாகத்தான் எதிர்த் தரப்பினர் சத்தியமூர்த்தியை  கொலை செய்துள்ளனர் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் தென்மாவட்டங்களில் பதுங்கியிருக்கும் கூடி படையினருக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆகையால்தான் அடுத்தடுத்து பல இடங்களில் இம்மாதிரியான தொடர் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன என்றும் போலீசார் கூறுகின்றனர். இதையடுத்து போலீசார் இந்த சம்பவத்திற்கு பின்னணியில் இருக்கும் கூலிப்படையினர் யார் என்று கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.