ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் திறப்பு! ரூ.35 லட்சம் செலவில் வேண்டுதலை நிறைவேற்றிய ரசிகர்!

திருச்சியைச் சேர்ந்த ரஜினி ரசிகர் தனது வேண்டுதலை நிறைவேற்ற ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார்.


திரைப்பட நடிகர்களுக்குக் கோயில் கட்டி வணங்குவதில் திருச்சி ரசிகர்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. ஏற்கனவே குஷ்புவுக்கு கோவில் கட்டியவர்கள் திருச்சி ரசிகர்கள்தான். அந்த வரிசையில் திருச்சியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஸ்டாலின் புஷ்பராஜ் ரஜினியின் பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டியுள்ளார். 

கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றபோது, அவர் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள், அலகு குத்துதல், அக்னிச் சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல் என பல்வேறு வேண்டுதல்களை மேற்கொண்டனர். அந்த வகையில் ஸ்டாலின் புஷ்பராஜின் வேண்டுதல் சற்று காஸ்ட்லியானது. 

ரஜினி குணமடைந்து மீண்டும் திரைத்துறையில் களைகட்டியுள்ள நிலையிலும் அரசியல் குறித்த பேச்சுகள் எழுந்து வரும் நிலையிலும் தனது வேண்டுதலை நிறைவேற்ற ஸ்டாலின் புஷ்பராஜ், திருச்சி விமான நிலையம் அருகே குமாரமங்கலம் என்ற இடத்தில் 35 லட்சம் ரூபாய் செலவில் ரஜினியின் பெற்றோரான ரானேஜிராவ் மற்றும் ராம்பாய் ஆகியோருக்கு மார்பளவு சிலையுடன் மணிமண்டபம் கட்டியுள்ளார்.

மணிமண்டபத் திறப்பு விழாவில் ரஜினிகாந்த் சார்பாக அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏராளமான ரஜினி ரசிகர்களும் வந்திருந்தனர். மணிமண்டபத்தைப் பார்க்க பல்வேறு தரப்பு மக்கள் சென்று வருகின்றனர்.