டாப் 10 தமிழ் படங்கள் – 2018 ! முதல் இடம் சர்காரா? 2.ஓவா?

2018ம் ஆண்டு வெளியாகிய படங்களில் ரசிகர்களை கவர்ந்த மற்றும் வெற்றிகரமாக ஓடிய பத்து தமிழ்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.


10. அசுரவதம். படத்தோட பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே சசிகுமார்தான். அவர் இல்லைன்னா நியாயம் இருந்திருக்காது. ஆனா அவர் இருந்ததாலேயே கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணுன மாதிரி இருந்தது.    மத்தபடி படம் முழு திருப்தியை கொடுத்தது. ரொம்ப குறிப்பா அந்த பிளாஷ்பேக் காட்சி அற்புதமா அமைஞ்சது. இன்னொரு பெரிய பூஸ்ட். கொரியன் படங்களோட பாதிப்பு இருந்ததை உணரமுடிஞ்சாலும் கூட அதுவும் நல்லவிதமாவேதான் இருந்தது.   ஆனா படம் பெரும்பாலான மக்களுக்கு போய் சேரவேயில்லைங்கிறது ரொம்ப வருத்தமான விஷயம். இந்த லிஸ்ட்லயே கூட சரியா ஓடாத ஒரே படம் இதுதான். அதனாலேயே தனி கவனம் இந்த மாதிரியான படங்களுக்கு நாம கொடுக்கணும்ங்கிறது உறுதியாகுது. அந்த வகையில் அசுரவதம் 10வது இடம்.

9. நாச்சியார். பாலா படங்கள் மேல இருக்குற மிகப்பெரிய குற்றச்சாட்டு என்னன்னா அவரோட எல்லா படங்கள்லயும் ஒரே கதை, திரைக்கதைதான் அப்படிங்கிற விஷயம். குறிப்பா க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லனோட சங்கை கடிச்சி துப்புறது சகஜமான விஷயமா இருக்கும்.   இந்த குற்றச்சாட்டு ஏத்துக்கொள்ள கூடிய விஷயம்தான். ஆனா அதுக்காக பாலாகிட்ட சரக்கே இல்லைன்னு சொல்றவங்களை பார்த்தா பயங்கரமா சிரிப்பு வந்துரும்.    நாச்சியார் படம் அறிவிப்பு வந்தப்போ அதே சங்கை கடிக்கிற க்ளைமாக்சிதான் இருக்கும்னு சொல்லி நிறைய பேர் கிண்டல் எல்லாம் பண்ணியிருந்தாங்க.    ஆனா அவங்க எல்லார் முகத்துலயும் பாலா பூசுன கரிதான் இந்த நாச்சியார்.  பாலாகிட்ட இருந்து இப்படி ஒரு ஃபீல் குட் படமே யாரும் எதிர்பார்க்கலைங்கிறது ரொம்ப வெளிப்படையா தெரிஞ்சது.  சொல்லப்போனா அவங்கள்லாம் அதிர்ச்சி அடைஞ்சாங்க.    அதிர்ச்சி காரணமா அவங்க படத்தை திட்டி புலம்பி பேசுவதை கூட இங்க பரவலா பார்க்க முடிஞ்சது. பாலா தன்னோட கம்போர்ட் ஜோன் விட்டு வெளிய வந்து படம் பண்ணுனா அது நிஜமாவே வேற லெவல்ல இருக்கும்னு ஏற்கனவே பலர் சொன்னதுதான். அதை பாலா நாச்சியார்ல செஞ்சப்ப அப்படி சொன்னவங்களே ரெண்டு ஸ்டெப் பின்னாடி போனது செம காமெடி. அடுத்த ஒரிஜினல் பாலா படத்துக்காக காத்திருக்கேன்.

8. 2.0: ஒரு வருஷத்துல ரெண்டு ரஜினி படம் ரிலீஸ் ஆகுறது ஒரு சந்தோசம்ண்ணா, அந்த ரெண்டு படமுமே நல்ல படங்களோட பட்டியல்ல இடம்பெறுவது அதைவிட சந்தோஷம். ரொம்பநாள் தயாரிப்புல இருந்த, ரொம்ப செலவு பிடிச்ச, ரொம்ப பிரமாண்டமான 2.0 ஒரு படமா மட்டுமில்லாம, நல்ல அனுபவமா மாறி நிக்கிறதை பார்க்கும்போது உள்ளாற ஒரு உல்லாலா.    ஷங்கர் இனிமே இதை தாண்டி என்ன மாதிரியான படம் பண்ணுவாருன்னு யோசிக்கும்போதே இந்த படம் எவ்ளோ பெருசுன்னு நீங்க புரிஞ்சிக்கலாம். அதைவிட சந்தோசமா ஒரே படத்துல நாலு விதமான ரஜினியை பார்க்குறதெல்லாம் செம மேட்டர். ஒரு வலிமையான கதை ஒன்னு எடுத்துக்கிட்டு, அதுக்கான நியாயமான செலவு செஞ்சி, அதை உலகம் முழுக்க நல்லமுறையில வெளியிட்டு, நியாயமான முறையில வெற்றியும் அடைஞ்சது நிஜமாவே ரொம்ப சந்தோசமான விஷயம்.   படம் வெளியாகி மிக்ஸ்டு ரிவ்யூஸ் தான் வாங்குனது. ஆனா குழந்தைகள் இந்த படத்தை கொண்டாடுறாங்க. அதனால தான் படம் வெளியாகி பல நாள் ஆகியும் தியேட்டர்ல குடும்பம் குடும்பமா ரசிகர்கள் வர்றாங்க. த்ரீடி அனுபவத்துல 2.ஓ பார்க்குரது உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது.


7. இரும்புத்திரை: தமிழ்ல சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் கொண்ட, மசாலா நிறைஞ்ச படங்கள் ரொம்ப கம்மியாயிருச்சி. சும்மா பேருக்கு க்ளைமாக்ஸ்ல இப்படி எல்லாம் பண்றது தப்புன்னு ஜல்லியடிக்காம காட்சியில் இருந்தே அந்த விஷயத்தை சீரியஸா அணுகுன படங்களை விரல் விட்டு எண்ணிறலாம். அந்த வகையில இரும்புத்திரை இந்த வருஷம் வந்த படங்கள்ல முக்கியமானது.    படத்தோட ஒரே பிரச்சினை என்னென்னா கொஞ்சம் ஓவரா பயமுறுத்திட்டாங்க. அது வில்லனை ரொம்ப பவர்புல்லா காமிக்க பண்ணப்பட்ட விஷயம்ங்கிறதால அதுவும் பெரிய பிரச்சினையா தெரியல. ஆனாலும் கூட இது நெகடிவான சில எண்ணங்களை மனசுல உண்டாக்கும்ங்கிறதுல மாற்றுக்கருத்து இல்ல.    ஆனா இதுல என்ன கூத்துன்னா டை ஹார்ட் மாதிரியான ஆங்கிலப்படங்கள் எல்லாத்துலயுமே இதான் கதை. அதைப்பார்த்தா ஜாலியா இருக்கும். இது நம்மூர் மேட்டர்ங்கிறதால அந்த பயம் வந்திருச்சு போல. அர்ஜுனுக்கு வில்லன் வேடம் ரொம்ப நல்லா பொருந்துது. விஷாலுக்கு இந்த வருஷம் வந்த சொல்லிக்கொள்ளும்படியான படம் இது.

6. கடைக்குட்டி சிங்கம் சில படங்கள் எல்லாம் நம்ம ஊர்ல மட்டுந்தான் எடுக்க முடியும். ஏன்னா அது பிரதிபலிக்கின்ற சில விஷயங்கள் எல்லாம் நமக்கு மட்டுந்தான் புரியும். அந்த வகையில கடைக்குட்டி சிங்கம் நம்ம படம்.    உறவுகளும், அவங்களோட குண நலன்களும், அதன் காரணமா ஒரு தனிப்பட்ட மனிதனோட வாழ்க்கையில ஏற்படுற பிரச்சினைகளும், அதை தீர்க்க அவன் அந்த உறவுகளையே தேடிப்போறதும் ரொம்ப எளிமையான முறையில, நல்ல நடிகர்களை வச்சி எடுக்கப்பட்ட ஒரு படம் இது. விவசாயிகளோட பெருமை பேசுறேன்னு மொக்கை போடுறதும், ரொம்ப மோசமான பாடல்களை கொண்ட படமாவும் கடைக்குட்டி சிங்கம் இருந்தாலும் கூட அதையெல்லாம் தாண்டி இந்த வருஷத்தோட மிகப்பெரிய ஹிட் படமா இது மாறி நிக்குது.    தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த வருசம் அதிகம் பெண்கள் பார்த்த படம் கடைக்குட்டி சிங்கம் தான். அதுமட்டும் இல்லாம நியாயமா அதிக நாட்கள் திரையரங்குகள்ல ஓடுன படமும் இதுத்ன். ஏ சென்டர் தவிர பி,சி சென்டர்ல இப்பவும் கடைக்குட்டி சிங்கம் கல்லா கட்டிகிட்டுதான் இருக்கு.

5. பரியேறும் பெருமாள்: வாங்க உக்காந்து பேசலாம்ங்கிற விஷயம் தான் பரியேறும் பெருமாளை தமிழின் மிகச்சிறந்த படங்கள்ல ஒண்ணா மாத்தி இருக்கு. படத்துல இயக்குனர் பேசியிருக்குற அரசியல் ரொம்ப ஷார். அதுமட்டும் இல்லாம படத்துக்கு கேரக்டர் தேர்வு அற்புதம்.   பரியேறும் பெருமாள் படத்துல சின்ன விஷயத்துல கூட காம்ப்ரமைஸ் பண்ணிக்கல. சட்டக்கல்லூரில என்ன நடக்குதுங்றது ரொம்ப இயல்பா டைரக்டர் மாரிசெல்வராஜ் காட்டியிருப்பாரு. அதுமட்டும் இல்லாம ஜாதிய வன்மம் நிறைஞ்சவங்க ரொம்ப இயல்பான மனிதர்களாக இருப்பாங்கங்ற திடுக்கிட வைக்கும் செய்தியையும் இயக்குனர் சொல்லியிருப்பாரு.   படத்துல பெரிய நெருடல் என்னனா? கதாநாயகன் – கதாநாயகி இடையிலான உறவு தான். இயல்பாவே ஒரு அழகான பொன்னுனா கூட பழகுற பையனுக்கு காதல் வந்துடும். ஆனால் எனக்கு காதல் இல்லங்றத திரும்ப திரும் ஹீரோ சொல்றது காமெடியா இருந்துச்சி. மத்தபடி கமர்சியலாவும் படம் ஜெயிச்சிருக்கிறது பெரிய விஷம்.


4. வட சென்னை: வெற்றிமாறனோட படங்கள்ல இருக்குற ஒரு பொதுவான விஷயம் என்னன்னா சமரசம் இல்லாத அந்த மேக்கிங். பொல்லாதவன் ஒரு பக்கா மசாலா படம். இப்பவும் நீங்க அந்த படத்தோட ஒரு காட்சியை எடுத்து பார்த்தீங்கன்னா அதுல வர்ற பேக்ரவுண்ட் விஷயங்களை கவனிங்க. அவ்ளோ இயல்பா இருக்கும்.   இந்த இயல்புதான் பொல்லாதவன் ஒரு மசாலா படமா இருந்தாலும் கூட அதுக்கு ஒரு க்ளாஸிக் அந்தஸ்து கொடுக்குது. இந்த விஷயத்தை இதோ வடசென்னை வரைக்கும் அப்படியே காப்பாத்தி கொண்டுவந்திருக்காரு இயக்குனர். அதுக்கே முதல்ல ஒரு ஸ்பெஷல் நன்றி. ஆரம்ப குழப்பங்கள் இருந்தாலும் கூட வடசென்னை ஒரு முக்கியமான படமா ஏன் இருக்குன்னா இதுல சூழ்நிலைதான் நாயகனை தீர்மானிக்குது.  ஏன்னா எல்லார் பக்கமும் ஒரு நியாயம் உண்டு. அதுக்கு நடுவுல நல்லதையும், கெட்டதையும் தேர்ந்தெடுக்குற கடமை நம்மளோடது. அந்த முடிவை புத்திசாலித்தனமா நம்மக்கிட்டயே விட்டது வெற்றிமாறன் பன்ச். இத்தனை லேயர்ல, இவ்ளோ கேரக்டர்ஸ் வச்சிக்கிட்டு, இவ்ளோ சம்பவத்தோட தமிழ்ல ஒரு படம் வந்திருக்குங்கிறதே நமக்கு பெருமைதான்.

3. காலா: கபாலிக்கு அப்புறமா வந்த ரஜினி படம். இல்ல இல்ல ரஞ்சித் படம். ரெண்டுமே இல்ல. இது ஒரு நல்ல படம். அவ்ளோதான். ரஜினியை வச்சி திரையில நிறைய மேஜிக் பண்ணலாம். அதுவும் ரஜினியே ரெண்டாவது தடவை நம்பி தன்னை ஒப்படைக்கும்போது என்னென்னாவோ பண்ணலாம். ஆனா ரஞ்சித் ரொம்ப தெளிவான ஆளு.  தான் எதுக்காக சினிமா எடுக்குறோம்ங்கிறதை புரிஞ்சி நடந்துக்குற ஒருத்தர். கபாலி படம் கூட கொஞ்சம் ஸ்லோவா இருந்ததா நிறைய குற்றச்சாட்டுகள் வந்தது. அதை நல்லமுறையில எடுத்துக்கிட்டு காலால அந்த பிரச்சினையையும் சரிபண்ணி ஒரு ஆக்ஷன் படமாவும், அதேநேரத்துல ஒடுக்கப்பட்ட மக்களோட வலிகளையும், அவங்களோட வாழ்வுரிமையையும் "நிலமே எங்கள் உரிமை" அப்படிங்கிற கருத்தோட ஆணித்தரமா சொன்ன படம்.  இதையெல்லாம் தாண்டிதான் ரஜினி இந்தப்படத்துல அட்டகாசமா ஸ்கோர் பண்ணியிருந்தாரு. அந்த "குமாரு யார் இவரு..?" ஸீன் ஒன்னு போதும். வண்ணங்களோட திருவிழாவா நடக்குற அந்த க்ளைமாக்ஸ் தமிழ் சினிமா இதுவரைக்கும் பார்த்திராத விஷயம்.

2. 96:  படம் பார்க்குறப்போ அப்படியே ஏதோ வசியம் பண்ணப்பட்ட ஆள் மாதிரி இருக்கும். ஒரு ஷாட்ல கூட கண்ணை அங்குட்டு இங்குட்டு திருப்பாம, மொபைலை நோண்டாம ரசிகர்கள் தியேட்டர்ல பார்த்த படம். ஒருகட்டத்துல உடைஞ்சி அழுற நிலைமைக்கு போயி, அப்புறம் ரசிகர்கள் தங்களை தாங்களே தேத்திக்கிட்டு போன படம் 96.   கல்லூரிக்காலங்கள், பள்ளிக் கூட நாட்களை மையமாக வைத்து தமிழ் சினிமாவுல வந்த அழகி, ஆட்டோகிராஃப் படங்களுக்கு அப்புறம் அந்த ஜேனர்ல வந்து ரசிகர்களை கவர்ந்த படம் 96. அதிலும் விஜய்சேதுபதி –த்ரிஷா கேரக்டர் பின்னி பெடல் எடுத்திருக்கும். இப்ப மஞ்சள் கலர்ல சுடிதார பார்த்த ரசிகர்களுக்கு த்ரிஷா தான் நியாபகத்துக்கு வருவாங்க.  படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. த்ரிஷா மீண்டும் ஒரு ரவுண்ட் வர்றதுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. விஜய் சேதுபதியை மேலும் ஒரு படி இந்த படம் உயர்த்தி வச்சது.


1.ராட்சசன்: இதுக்கு முன்னாடி தமிழ்ல எத்தனையோ க்ரைம் கலந்த திகில் படங்கள் வந்திருந்தாலும் கூட, சீரியல் கில்லர் பத்தின படங்கள் இருந்தாலும் கூட, இன்னைய தேதிக்கு தமிழ்ல வந்த பெஸ்ட் த்ரில்லர் படம் இதுதான்னு சொல்லலாம். அந்த இசையில் ஆரம்பிச்சி, நுணுக்கமான பல விஷயங்களை கோர்த்தது வரைக்கும் பார்த்து பார்த்து செதுக்கியிருந்தாங்க இந்த படத்தை.  

   அதுக்கான ரிசல்ட் மக்கள் கொடுத்தாங்க. ரொம்பநாள் கழிச்சி நல்ல படம் பார்த்த திருப்தியில பலர் தியேட்டர் விட்டு வெளிய வர்றதை பார்க்க முடிஞ்சது. அதுக்காகவே மொத்த டீமுக்கும் நன்றி. படத்தோட ஆரம்பம் முதல் கடைசி வரை சீட் நுனியில் ரசிகர்கள் உட்கார்ந்திருங்காங்க.  ஒரு மனிதனின் மனச்சிதைவு எவ்வளவு ஆபத்தை ஏற்படுத்தும்னு மிரட்டி சொல்லியிருப்பாரு இயக்குனர். படத்துல டூயட் இல்லாதது, காமெடிங்ற பேர்ல மொக்க போடாதது செம.

   ஹாலிவுட், கொரியன், மலையாள படங்களை பார்க்குற தமிழ் ரசிகர்கள் இந்த மாதிரி தமிழ்ல படம் வராதானு தவிச்சிட்டு இருந்தாங்க. அந்த குறைய ராட்சசன் போக்கியது. அதுனால தான் இந்த வருடத்தின் நம்பர் ஒன் படம் ராட்சசன் தான். இந்த படங்களோட ஒப்பிடும் போது வசூல் ரீதியாக பேசப்பட்ட சர்கார், சீமராஜா போன்ற படங்கள் எல்லாம் முதல் பத்து இடத்திற்குள் வர வாய்ப்பில்லை.

   இதே போல் அடுத்து வெளிவர உள்ள மாரி 2, சீதக்காதி போன்ற படங்களை பார்த்த பிறகு இந்த பட்டியலில் மாறுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. அதுவரை ரசிகர்களுக்கு இதைத்தான் டாப் 10 படமாக கூறுகிறது டைம்ஸ் தமிழ்.

நன்றி: பாலகணேசன்