கந்தசஷ்டி திருவிழா திருச்செந்துரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது! இன்று சூரசம்ஹாரம் காணத்தவறாதீர்கள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2வது படைவீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில்.


இங்கு நடைபெறும் முக்கிய விழாவில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கோலகலமாக தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 2ஆம் தேதியான நாளை நடைபெறுகிறது. நவம்பர் 3ஆம் தேதியன்று முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் பெயர் காரணம் : தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.

இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.

வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சு+ரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே செந்தில்நாதர் என மருவியது. தலமும் திருஜெயந்திபுரம் என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.

 நவம்பர் 2ஆம் தேதி (நாளை) கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு மேல் கோவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் சென்று, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெறுகிறது.

வெற்றிக்கு திருக்கல்யாணம் : வெற்றிக்கு நவம்பர் 3ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதையொட்டி, கோவில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, மற்ற பூஜைகள் நடைபெற்று, அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்மன் தோள்மாலை மாற்றுதல், இரவில் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

8-ம் நாளான 4-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி குமரவிடங்க பெருமான் தங்கமயில் வாகனத்திலும், தெய்வானை அம்பாள் பூம்பல்லக்கிலும் எழுந்தருளி, பட்டினபிரவேசம் நடைபெறும். 9-ம் நாளான 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் 11-ம் நாளான 7-ந்தேதி (வியாழக்கிழமை) வரையிலும் தினமும் மாலை 6 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாளுடன் ஊஞ்சலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 12-ம் நாளான 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பின்னர் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்து கோவில் சேர்கிறார்கள்.