இன்று புரட்டாசி கடைசி சனி..! பெருமாளைக் கும்பிட்டால் கோடி புண்ணியம்

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் எல்லாமே பெருமாளை வழிபடுவதற்குரிய புண்ணிய தினங்களாகும்.


அந்த வகையில் இன்றைய தினம் புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக வருகிறது. இந்த கடைசி சனிக்கிழமையின் விசேஷ அம்சங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

செல்வம், ஆயுள், ஆரோக்கியம் என மூன்று பலன்களையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய விரதம் ஒன்று இருக்கிறது என்றால் அது புரட்டாசி சனிக்கிழமை விரதம்தான். நவகிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்பர். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுள்காலம் அமையும். ஆனால், அந்த கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதி அவரே. எனவேதான் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருக்கும் வழக்கம் உருவானது.

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், வழிபாடுகளும் நடைபெறுகிறது. புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும். இவ்வாறு விரதம் இருப்பதன் மூலம் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.

சனி தோஷம் உள்ளவர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் காலையில் நல்லெண்ணை ஸ்நானம் செய்து ஆலயம் சென்று, கருப்புத் துணியில் எள்ளை சிறு பொட்டலமாகக் கட்டி எள் எண்ணெய் (நல்லெண்ணை) விட்டு விளக்கேற்றி அர்ச்சனைகள் செய்து சனீஸ்வர ஸ்தோத்திரம் பாடி சனீஸ்வரனை வழிபட வேண்டும்.

பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

பெருமாள் படத்தின் முன்னர், நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். புரட்டாசி சனிக்கிழமையில் திருமாலை வணங்கி வந்தால் நம்மைச் சுற்றியுள்ள தீமைகள் முற்றிலும் அகலும். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வதால் கிரக ரீதியிலான தோஷங்கள் விலகும். புரட்டாசி 4வது சனிக்கிழமையன்று வறியவர்கள், எளியவர்களுக்கு மரியாதை செய்யவேண்டும். அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

இன்று வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு சென்று பெருமாளை வழிபட்டு வளங்கள் பல பெறுவோமாக.