மறக்கவே முடியாத தினம் இன்று. இரட்டை உறுப்பினர் தொகுதிக்கு கோரிக்கை வைக்கும் விடுதலை சிறுத்தைகள்.

இரட்டை உறுப்பினர் தொகுதி முறையும் இரட்டை வாக்குரிமையும் மறைந்துபோனது குறித்து பூனா ஒப்பந்த நாளான செப்டம்பர் 4 குறித்து பதிவு வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் எம்.பி.


" வரலாற்றை எழுதுகிறவர் கடந்தகாலத்தின் சாட்சியாகவும் எதிர்காலத்தின் இயக்குனராகவும் இருக்கவேண்டும்" என்றார் அம்பேத்கர். இந்த வரையறை சாதி ஒழிக்கப்படவேண்டும் என விரும்புகிற ஒவ்வொரு தலித்துக்கும் பொருந்தும். இழிவுகளும், வலிகளும் நிரம்பிக்கிடக்கும் கடந்த காலத்துக்கு சாட்சியமாக இருப்பது மிகவும் துயரமானது. அதனால்தான் பெரும்பாலான தலித்துகள் கடந்த காலத்தை மறக்க விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். அப்படி அவர்கள் துடைத்தெறிந்த கடந்தகால நினைவுகளில் துயரங்கள் தொலைந்தனவோ இல்லையோ புரட்சியாளர் அம்பேத்கர் போராடிப்பெற்ற உரிமைகள் குறித்த விவரங்கள் மறைந்துபோயின. அப்படி மறக்கப்பட்ட ஒன்றுதான் 'இரட்டை உறுப்பினர் தொகுதி முறை' என்னும் தேர்தல் முறை. 

அம்பேத்கர் மரணமும் இரட்டை உறுப்பினர் தொகுதி முறையின் அஸ்தமனமும்: 

பூனா ஒப்பந்தத்தின்மூலம் அம்பேத்கர் பெற்றுத் தந்தது இப்போதிருக்கும் தனித் தொகுதி என்றுதான் தலித்துகளில் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டுள்ளனர். அது உண்மையல்ல. நாடு சுதந்திரம் அடைந்து இரண்டு பொதுத் தேர்தல்களில் இரட்டை உறுப்பினர் தொகுதி முறைதான் நடைமுறையில் இருந்தது. அம்பேத்கர் இறந்ததும் தலித் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொண்டு தந்திரமாக அந்த முறையை ஒழித்துக்கட்டிவிட்டார்கள். 

இரட்டை உறுப்பினர் தொகுதியென்றால் என்ன?: 

எஸ்சி/எஸ்டி மக்கள் எந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அந்தத் தொகுதி அவர்களுக்கு ஒதுக்கப்படும். அவர்கள் மைனாரிட்டியாக இருந்தால் தொகுதியை இருபங்கு அளவுகொண்டதாக மாற்றி அதிலிருந்து இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அந்தத் தொகுதிகளில் இரண்டு பெட்டி வைக்கப்பட்டிருக்கும். ஒன்று எஸ்சி/எஸ்டி பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கானது. மற்றது இன்னொரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதற்கு. எஸ்சி/எஸ்டி பிரதிநிதிக்கான பெட்டிகளில் இருக்கும் வாக்குகளை முதலில் எண்ணி அதில் அதிகம் பெற்றவரைத் தேர்ந்தெடுப்பார்கள். பின்னர் மற்ற பெட்டிகளில் வாக்கு எண்ணப்படும். அதில் எஸ்சி/எஸ்டி பிரதிநிதிக்காகப் போட்டியிட்டவருடைய வாக்கும் கணக்கிடப்படும். அவற்றுள் எவர் அதிக வாக்கு பெற்றாரோ அவரே வென்றவர். சில தொகுதிகளில் அதிலும் ஒரு எஸ்சி/எஸ்டி வேட்பாளரே வெல்லவும் வாய்ப்பு உண்டு.

இரட்டை வாக்குரிமையை காந்தி பறித்தார்!இரட்டை உறுப்பினர் தொகுதியை காங்கிரஸ் பறித்தது:

ஆந்திரப் பிரதேசத்தின் பார்வதிபுரம் தொகுதியிலிருந்து இரண்டு பழங்குடியினப் பிரதிநிதிகள் வெற்றிபெற்றனர். அதில் போட்டியிட்ட வி.வி.கிரி தோற்றுப்போனார். அந்தத் தேர்தலை எதிர்த்து அவர் வழக்கு தொடுத்தார். அதையொட்டித்தான் 1961 ஆம் ஆண்டு இப்போதிருக்கும் தனித் தொகுதிக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அம்பேத்கர் எப்போது இறப்பார் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி தலித் மக்களுக்குச் செய்த மிகப்பெரும் துரோகம் இரட்டை உறுப்பினர் தொகுதிமுறை ஒழிப்பு. இரட்டை வாக்குரிமையை காந்தி பறித்தார்; இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை காங்கிரஸ் பறித்தது. 

தலித்மக்களின் எதிர்ப்பைப் புறக்கணித்த காங்கிரஸ்:

இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை ஒழிக்கக்கூடாது என இந்திய குடியரசுக் கட்சி போராடியது. காங்கிரஸின் முடிவை அக்கட்சியின் உறுப்பினர்களேகூட முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. 1960 டிசம்பரில் கூடிய காங்கிரஸ் பாராளுமன்றக் கட்சிக்கூட்டத்தில்தான் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. 555 உறுப்பினர்களில் 229 பேர் மட்டுமே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இரட்டை உறுப்பினர் தொகுதி ஒழிப்புக்கான தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில் 124 பேர் மட்டும் தான் அதை ஆதரித்தனர். 94 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஆனாலும் விடாப்பிடியாக 1961 இல் அதை காங்கிரஸ் அரசு ஒழித்துக்கட்டிவிட்டது.

இரட்டை உறுப்பினர் தொகுதியை மீண்டும் அமைக்கவேண்டும்!

அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே ஏற்பட்ட பூனா ஒப்பந்தம் தீண்டாத மக்களுக்கு இரட்டை வாக்குரிமையை மறுத்தபோதிலும் சற்றே உரிமை தரும் இரட்டை உறுப்பினர் முறையைக் கொண்டுவந்தது. இந்திய வரலாற்றில் தீண்டாதார் ஒரு தரப்பாகவும் மற்றவர்கள் இன்னொரு தரப்பாகவும் இருந்து ஒப்பந்தம் செய்தது அப்போதுதான். அதில் மாற்றம் செய்யவேண்டுமென்றால் தீண்டாதார் தரப்பைக் கலந்து ஆலோசிக்கவேண்டும் என அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். ஆனால் தீண்டாத மக்களைக் கலந்தாலோசிக்காமலேயே இரட்டை உறுப்பினர் தொகுதி முறையைப் பறித்துவிட்டார்கள். அதற்குப்பின் ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன.

இப்போதிருக்கும் தனித்தொகுதி முறை சரியான தலித் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு தரவில்லை என்பதுமட்டுமின்றி தலித்துகளும் மற்றவர்களும் கலந்துறவாடவும் வழிசெய்யவில்லை. அம்பேத்கர் போராடிப் பெற்றுத் தந்த உரிமையை- இரட்டை உறுப்பினர் தொகுதி முறையை- இழந்துவிட்டு இத்தனைகாலம் அமைதிகாத்தது சரிதானா என தலித்துகள் எண்ணிப்பார்க்கவேண்டும். 'மீண்டும் இரட்டைத் தொகுதி முறையைக் கொண்டுவா! அல்லது இரட்டை வாக்குரிமையை வழங்கு! ' என முழங்கவேண்டியதன் தேவையை விவாதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்