புரட்டாசி மகாளய அமாவாசைக்கு பின்பு வரும் ஒன்பது நாட்கள் அம்பிகைக்கானது.
இன்று துர்க்காஷ்டமி..! துயரங்கள் விலகுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

புரட்டாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதியில் துர்க்காஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று துர்க்காஷ்டமி கடைபிடிக்கப்படுகிறது. துர்க்காஷ்டமி அன்று துயரங்கள் விலக நாம் துர்க்கையை வழிபடுவது அவசியமாகும்.
மாதம் முழுவதும் இரண்டு அஷ்டமிகள் வரும். வளர்பிறையிலும் அஷ்டமி வரும், தேய்பிறையிலும் அஷ்டமி வரும். ஆனால் நவராத்திரி கொண்டாட்டத்தின் 8வது நாளில் வரும் துர்க்காஷ்டமி மிகவும் விசேஷமானது. புரட்டாசி மாதம் நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்க்காஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. துர்க்கையை வழிபட ஏற்ற தினம் துர்க்காஷ்டமியாகும்.
நவராத்திரி விரதத்தில் பூஜை செய்வதற்கு மிகவும் முக்கியமான நாட்கள் சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களாகும். இந்த மூன்று நாட்களும் விரதத்தோடு பூஜித்தால் ஒன்பது நாட்கள் பூஜித்த பலன் கிடைக்கும்.
சக்தியின் எல்லையற்ற ஆற்றலின் வடிவம்தான் துர்க்கை. ஒருவருக்கு நவராத்திரி நாட்களில் பூஜை நடத்துவதற்கு போதிய வசதி இல்லாமல் இருந்தால் அவர் நவராத்திரியின் எட்டாவது தினமான அஷ்டமி தினத்தில் அவசியம் பூஜிக்க வேண்டும்.
செம்பருத்தி மற்றும் செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து விரதம் இருந்து துர்க்கை அம்மனை வழிபடுதல் கூடுதல் பலன்களை தரும். துர்க்காஷ்டமி நாளில் தன்னம்பிக்கை பெருகவும், எடுத்த காரியத்தில் வெற்றி பெறவும் துர்க்கையை வழிபடுதல் வேண்டும். துர்க்கைக்கு உரிய பாடல்களை மனமுருகி பாடி துதிப்போருக்கு கஷ்டங்கள் அகலும், வாழ்க்கை வளமாகும்.
குறிப்பாக, வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள், துர்க்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்களப் பொருட்களை வழங்கினால், துர்க்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
இன்று துர்க்காஷ்டமி. மாலையில் ஸ்ரீதுர்க்கையாக பாவித்து அம்பிகையை வணங்கலாம். கோவில்களுக்கு சென்று ஸ்ரீதுர்க்கைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. ராகுகால வேளையில் கோவில்களில் உள்ள துர்க்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதால் நமக்கு எல்லா சக்தியும் கிடைக்கும். கண் திருஷ்டி, பில்லி, சூனியம் எல்லாம் துர்க்காஷ்டமியில் துர்க்கையை வழிபாடு செய்வதால் விலகிவிடும்.
இன்று துர்க்கையை வழிபட்டால் அனைத்து பலன்களையும் பெறலாம்.