நீங்கள் உத்திரட்டாதி நட்சத்திரமா? செல்வ வளம் செழிக்க எளிய வழி இருக்குது!

வாழ்க்கையில் சில நேரங்களில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. அதனால் சிலர் கடனாளியாகி கஷ்டப்படுகிறார்கள்.


இத்தகைய துயரச் சூழலில் சிக்கித் தவிப்போருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களை கடன் பிரச்சனையிலிருந்து மீட்டு நல்வழி காட்டும் திருத்தலமாகத் திகழ்கிறது தீயத்தூர்.

திருமால் தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு லிங்க பூஜை செய்து வந்தார். ஒருமுறை ஒரு பூ குறைந்தது. எனவே, தன் கண்ணையே ஒரு மலராக நினைத்து, அதை எடுக்க முயன்றபோது, சிவன் அவர் முன் தோன்றித் தடுத்தார். இதையறிந்த இலட்சுமிக்கும், சிவதரிசனம் பெறும் எண்ணம் ஏற்பட்டது. அகத்தியரின் ஆலோசனையின்படி, பூலோகம் வந்து, ஆயிரம் தாமரை மலர்களால் சிவனைப் பூஜை செய்தாள்.

இவளது பூஜையில் மகிழ்ந்த சிவன் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்தார். இதனால் இத்தல இறைவன், சகஸ்ரலட்சுமீஸ்வரர் ஆனார். சகஸ்ரம் என்றால் ஆயிரம். அகிர்புதன் மகரிஷி, தேவசிற்பி விஸ்வகர்மா, ஆங்கிரஸ மகரிஷி, அக்னி புராந்தக மகரிஷி, ஆகியோர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். இவர்கள் மகாலட்சுமிக்கு தரிசனம் தந்த சகஸ்ரலட்சுமீஸ்வரரைத் தரிசிக்க மாதம் தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அரூப வடிவில் இத்தலம் வந்து சிவனை ஹோம பூஜை செய்து வழிபட வருவதாக ஐதீகம்.

எனவே உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரட்டாதி நட்சத்திரத்திலோ வழிபாடு செய்ய வேண்டிய தலம் இது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு. இதனால் பணக்கஷ்டம் நீங்கும், தடைபட்ட காரியங்கள் சிறப்பாக நடக்கும் என்பது நம்பிக்கை.

தீயாகிய அக்னிபகவானும், அயனாகிய சூரிய பகவானும் இங்கு ஹோமம் செய்து சிவனை வழிபட்டதலமாதலால், இவ்வூர் தீயத்தூர் ஆனது. அக்னி வழிபட்ட தலமாதலால், உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீர சிறப்பு பிரார்த்தனை செய்கிறார்கள். கடன் பிரச்னை தீரவும், செல்வம் செழிக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தலத்து பிரகன்நாயகி அம்பாளை வழிபடுகின்றனர். சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.

அம்மன் பிரகன் நாயகி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். பிரகாரத்தில் விநாயகர், நந்தி, தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, நாகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. வாஞ்சா கணபதி தனி சன்னதியில் உள்ளார். இலட்சுமி பூஜை செய்த சிவன் என்பதால், இத்தலத்தை வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கடன் பிரச்னை தீர, செல்வம் செழிக்க, புத்திர பாக்கியம் கிடைக்க வழிபாடு செய்யப்படுகிறது. சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து சிறப்பு அர்ச்சனை செய்யப்படுகிறது.

இத்தலத்தில் ஹோமங்கள் செய்து, நெய், முழு முந்திரி, திராட்சை, தேன், பாதாம்பருப்பு, ஆகியவை கலந்த சர்க்கரைப்பொங்கலை சிவனுக்கு நைவேத்தியம் செய்து ஏழை மக்களுக்கு அளிப்பது சிறப்பு.