உளுந்தூர்பேட்டையில் ஒரு திருப்பதி..! தயாராகிறது பிரமாண்ட ஆலயம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலைக் கட்டி வருகிறது.


ஹைதராபாத், மும்பை, ஆகிய நகரங்களிலும் கட்டியுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரியைத் தொடர்ந்து, மத்திய தமிழகப் பகுதியான உளுந்தூர்பேட்டையில் ஓர் ஆலயம் கட்ட தேவஸ்தானம் முடிவுசெய்திருந்தது. கோயில் அமைவதற்குரிய இடத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது, உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு தானே முன்வந்து இடத்தைத் தருவதாக ஒப்புக்கொண்டார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் குமரகுரு செயல்பட்டுவருகிறார். ஆலயம் அமைவதற்கான நிலப் பத்திரத்தை திருப்பதியில் வைத்து வழங்க குமரகுரு ஆசைப்பட்டார்.

இந்த நிலையில், ரதசப்தமி நாளில் திருப்பதி வேங்கடேசப் பெருமாளை சுவாமி தரிசனம் செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்குக் கோயில் கட்டுவதற்கான 5.5 ஏக்கர் நிலத்துக்குரிய நிலப்பத்திரத்தை தமிழக முதல்வர் பழனிசாமி தேவஸ்தான நிர்வாக இயக்குநர் அனில்குமார் சிங்காலிடம் குமரகுரு முன்னிலையில் வழங்கினார்.

அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி, “உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும்" என்றார். இதுபற்றி உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுருவிடம் பேசினோம். ''எங்க அப்பா சுதந்திரப்போராட்டத் தியாகி. தியாகிகள் பென்ஷன்கூட வாங்க மாட்டேனுட்டார். நான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அ.தி.மு.க-விலிருக்கிறேன்.

1980-ம் வருஷம், ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தேன். கிட்டத்தட்ட 39 வருஷமா ஜனவரி 1 - ம் தேதி, திருப்பதி பெருமாளை வணங்க வந்துடுவேன். 2016-ல் அம்மா இருந்தப்போ உளுந்தூர்பேட்டையிலிருக்கும் ஆதிகேசவப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தினேன். சிவன், மகாவிஷ்ணுன்னு எல்லா தெய்வங்களையும் வணங்குவேன்னாலும், திருப்பதி பெருமாள் எனக்கு ரொம்பவும் ஃபேவரைட்.

என் வாழ்க்கையில் எல்லாமே பெருமாள்தான். அவருடைய கோயில் அமைய நிலம் வழங்குவது கிடைத்தற்கரிய பாக்கியம்'' என்றார்.