பெண்கள் விரைவில் கர்ப்பமாக எந்த நிலையில் உடல் உறவு கொள்ள வேண்டும்?

விரைவில் பெண்கள் கர்ப்பமாக எந்த நிலையில் உடலுறவு அல்லது கலவியை செய்யவேண்டும் என்பதை தற்போது காணலாம்.


பொதுவாகவே தாய்மை அடைவது என்பது பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தாய்மை அடைந்த பெண் தான் தன் வாழ்வில் முழுமை அடைந்தவளாக காட்சியளிக்கிறாள். அத்தகைய மகத்துவம் கொண்ட தாய்மையை அடைவதற்கு இக்காலப் பெண்கள் பல போராட்டங்களை சந்தித்து வருகின்றனர். பலர் தங்களால் தாயாக முடியவில்லையே என்று எண்ணி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அந்தக் காலத்தில் பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதற்காக குடும்பக் கட்டுப்பாடு அவசியம் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த காலக்கட்டத்தில் பலரும் குழந்தை வேண்டுமென்று ஃபர்டிலிட்டி சென்டரை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இம்மாதிரியான அவலநிலைக்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறைதான் என்கிறார்கள் வல்லுநர்கள். நாம் சாப்பிடும் ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவு , வேலை செய்யும் இடங்களில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல் இவை அனைத்தும் குழந்தையின்மை பிரச்சினைக்கு வித்திடுகிறது. இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு படுக்கையறையில் நாம் பின்பற்ற வேண்டிய ஒரு சில விஷயங்களைப் பற்றி இப்பொழுது காணலாம். முதலில் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கும் தம்பதியினர் , கலவியில் ஈடுபடுவதற்கு முன்பாகவே அவர்களது மருத்துவர்களை அணுகி பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர்களிடம் இருந்து போலிக் ஆசிட் போன்ற மருந்துகளை பெற்று அதனை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய மாத்திரைகளை உட்கொள்வதன் மூலமாக உங்களுடைய பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும். அதேபோல் மருத்துவ பரிசோதனையில் பெண்களின் கருப்பையில் இருக்கும் பிரச்சினைகள் மற்றும் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை சரியான மருத்துவர்களின் ஆலோசனைகளின் படி நடந்து கொண்டு சரி செய்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு பொதுவாகவே பிசிஓடி மற்றும் பிசிஓஎஸ் போன்ற கருப்பை பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமாகும். இந்த பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கு பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தகுந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் எடையையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பொதுவாகவே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தங்களுடைய உடல் எடையை குறைத்தல் அவசியம்.

அதேபோல் பெண்கள் சீக்கிரமாக கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று விரும்பினால், உங்களது அண்டவிடுப்பின் காலத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். கர்ப்பப்பை வாயிலிருந்து சளி போன்ற நீர்மம் பொருள் வெளியேற்றம் அடையும் பொழுது அண்டவிடுப்பு நடைபெறும்.

  கலவியில் ஈடுபட்ட பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் வரை படுக்கையில் படுத்துக் கொள்வது பெண்களின் கருப்பைக்குள் விந்தணுக்கள் நுழையும் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதுபோல் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின்பு உடனடியாக குளிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு சிலருக்கு மன அழுத்தத்தினாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பாலியலில் ஈடுபடும்பொழுது ஆண் பெண் இருவருமே அமைதியான மனநிலையில் இருக்க வேண்டும். மன அழுத்தத்துடன் செயல்பட்டால் அது அந்த உறவிற்கான முழுமையை அளிக்காது. ஆகையால் மன அழுத்தத்தைப் போக்கி கொள்வதற்கு இருவரும் யோகா , தியானம் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது உங்களுடைய பாலியல் வாழ்க்கைக்கு நல்ல மாற்றத்தை அளிக்கும்.

கர்ப்பம் தரிக்க வேண்டும் என நினைப்பவர்கள் தங்களுடைய புகைப் பழக்கத்தையும் குடி பழக்கத்தையும் அறவே நிறுத்திக் கொள்ள வேண்டும். புகைப்பழக்கமும் குடிப்பழக்கமும் கருத்தரிப்பதற்கு எதிரியாக அமையக்கூடும். இதுபோன்று கப்ஃபைன் சார்ந்த பொருட்களை எடுத்துக் கொள்வதிலும், சற்று கவனத்தோடு செயல்படுங்கள். கடைசியாக சத்தான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவுகளை உட்கொள்வதன் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான உடல் உறவை பெறுவதற்கும் நல்ல ஆரோக்கியமான உடல் தேவை என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.