குருபெயர்ச்சிக்கு நடைபெறும் புஷ்கரத் திருவிழா! புண்ணிய தரிசன மகிமை!

புஷ்கரத் திருவிழா என்பது ஒவ்வொரு வருடமும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயரும் பொழுது அந்தந்த ராசிக்கு உரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.


சிருஷ்டியில் இருக்கும் மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கும் அதிபதி பிரம்மா. அவற்றில் ஒருசில தீர்த்தங்களுக்கு நம் புராணங்கள் புஷ்கர விசேஷத்தை நிர்வகித்துள்ளன. பிரம்மாவின் கமண்டலத்தில் உள்ள புஷ்கரமான குரு பகவான் குரு பெயர்ச்சி சமயங்களில் அந்தந்த ராசிக்குரிய தீர்த்தங்களில் 12 நாட்கள் பிரவேசம் செய்து வாசம் செய்வதாக ஐதீகம்.

இந்த புண்ணிய காலத்தில் மும்மூர்த்திகளும், தேவர்களும், ரிஷிகளும் அந்தந்த தீர்த்தங்களுக்கு வந்து நீராடி மகிழ்வதாகவும் நம்பப்படுகிறது. எனவே இந்த புஷ்கர காலங்களில் அதற்குரிய நதிகளில் நீராடுவது மூன்றரை கோடி தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியத்திற்கு நிகரானது. அப்படி நீராடி தானம் செய்வது மற்ற நாட்களில் செய்யும் தானங்களை விடப் பன்மடங்கு புண்ணியத்தை அளிக்கும்.

அந்த வகையில் இந்த வருட குருப் பெயர்ச்சியையொட்டி புஷ்கர திருவிழாவானது அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள பிரம்மபுத்ரா நதியில் கொண்டாடப்பட உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற 51 சக்தி பீடங்களில் ஒன்றான காமக்கியா கோயில் இங்குதான் உள்ளது. புஷ்கர காலங்களில் வரையறுக்கப்பட்ட நதிகளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து முன்னோர்களை வழிபடுவது பித்ரு சாபம் நீங்க வழி வகுக்கும்.

நவம்பர் 5 திருக்கணித பஞ்சாங்கப்படி குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனூர் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதனால் தனூர் ராசிக்குரிய நதியான பிரம்மபுத்ரா என்கிற புஷ்கர வாஹினி நதியில் இந்த முறை புஷ்கர திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்நதியில் நவம்பர் 5-ம் தேதி முதல் 16ம் தேதி வரை குரு பகவான் வாசம் செய்வார். குரு பெயர்ச்சி தொடங்கி இந்த 12 நாட்களும் ஆதி புஷ்கரம் என்று கொண்டாடப்படுகின்றது.

பாரத தேசத்தில் தொன்றுதொட்டு விளங்கும் புண்ணிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்ரா. இந்த நதி ஆசியாவில் இருக்கும் பெரிய நதிகளில் ஒன்று. கைலாய மலையில் பிறந்து, திபெத்தில் இமாலய பள்ளத்தாக்குகளில் தவழ்ந்து அஸ்ஸாமில் புஷ்கர வாஹினி என்ற நாமத்துடன் நுழைகிறது. திப்ருகரில் இரண்டாகப் பிரிந்து, பின்னர் 100 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இணைகிறது. பின்னர் கங்கையின் கிளை நதியான பத்மாவுடன் இணைந்து பின்னர் மிகப்பெரிய கழிமுகத்தை பங்களாதேஷில் ஏற்படுத்தி வங்காள விரிகுடாவில் சங்கமிக்கிறது.

பிரம்மாவுக்கும் அமோகா என்ற தேவ கன்னிகைக்கும் நீர் வடிவில் பிறந்தவர் பிரம்மபுத்திரர். அமோகா தேவலோகம் திரும்பிவிட, சாந்தனு முனிவர் நான்கு மலைகளுக்கு இடையில் அந்தப் புத்திரனை வளர்த்து வரலானார். அதுவே மிகப் பெரிய ஏரியாக பிரம்ம குண்டம் என்று விளங்கி வந்தது. பிரம்மாவின் புதல்வனாக நீர் வடிவில் பிறந்து வளர்ந்து, பிரம்மாண்ட நதியாய் பிரவகித்ததால் பிரம்மபுத்ரா என்று அழைக்கப்பட்டது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கோதாவரியிலும், 2016 ஆம் ஆண்டு கிருஷ்ணாவிலும், 2017 ஆம் ஆண்டு காவிரி நதியிலும், 2018ல் தாமிரபரணியிலும் புஷ்கர விழா நடைபெற்றது.