பாம்பு தோஷம் இருக்கிறதா? அடிக்கடி பாம்பு கனவில் வருகிறதா? நீங்கள் வழிபட வேண்டியது இங்குதான்!

நவகிரகங்களுள் அரவு கிரஹங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் தனிச்சன்னதி இருப்பது அபூர்வம்.


அப்படி இருந்தாலும் இரு கிரஹங்களும் அநேகமாக ஒரே சன்னதியில் தனித்தனியே தரிசனம் தருவது வழக்கம். ராகுவும் கேதுவும் வித்தியாசமாக தனித்தனிச் சன்னதியில் வீற்றிருக்கும் தலம், சீர்காழியில் உள்ள நாகேஸ்வரமுடையார் கோயில். ராகுபகவானின் பெயர்ச்சியால் ஏற்படும் பலன்கள் நற்பலன்களாக மாறவும், கூடுதல் நன்மைகளைப் பெறவும் ராகு தலங்களில் வழிபாடு செய்வது சிறப்பானதாகும்.

அப்படி ராகு பகவானுக்குரிய பிரத்யேகமான பரிகாரத் தலமாக அறியப்படுவது `ஆதி ராகு ஸ்தலம்' என அழைக்கப்படும் சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோயில். இந்தத் தலத்தில்தான் ராகுவும் கேதுவும் தவமிருந்து, நாகேஸ்வரமுடையரை வழிபட்டு கிரகப்பதவியை அடைந்தனர் என்கிறது தல புராணம்.

தேவரும் அசுரரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்து அமுதம் பெற முடிவு செய்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலைக் கடைந்தனர். அதிலிருந்து லட்சுமி, தன்வந்திரி, சிந்தாமணி, ஐராவதம், ஆலகால விஷம், காமதேனு முதலியன தோன்றின. இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வு அருளும் தேவாமிர்தம் தோன்றியது.

அசுரர்களை எப்படியாவது அமிர்தத்தை உண்ணாமல் தடுக்க எண்ணிய மகாவிஷ்ணு, மோகினி உருவமெடுத்தார். மோகினியின் அழகைக் கண்ட அசுரர்கள் மதிமயங்கினர். உணர்விழந்து செயலற்று நின்றனர். இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்த மோகினி உருவிலிருந்த மகாவிஷ்ணு, தேவர்களுக்கு அமிர்தத்தைக் கொடுத்தார்.

அசுரர்களில் விப்ரசித்திக்கும், இரணியனின் தங்கை சிம்ஹை என்பவளுக்கும் பிறந்த `சியிங்கேயன்’ என்பவன் தேவவடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தைப் பரிமாறிக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் அதைக் குறிப்பால் உணர்த்தினர். அவர் தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனை ஓங்கி அடித்தார்.

அடித்த வேகத்தில் அந்த அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு, தலை `சிரபுரம்’ என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் `செம்பாம்பின் குடி`யிலும் விழுந்தது. தேவார்மிதம் உண்டதால் அவனுக்கு மரணம் சம்பவிக்கவில்லை. மாறாக அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாயிற்று. இரு அரவங்களும் சிவபெருமானைத் தியானித்துத் தவமியற்றின.

காற்றை மட்டுமே உணவாகக்கொண்டு கடும் தவம் புரிய, இறைவன் மனமிறங்கி பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது அரவங்கள் சிவபெருமானிடம் சூரிய, சந்திரனை விழுங்கும் சக்தியையும், அகில உலகையும் ஆட்டிப் படைக்கும் வலிமையையும் தங்களுக்கு அருளுமாறு வேண்டின.

சூரிய, சந்திரர்கள் உங்களுக்குப் பகைவர்கள்தான். ஆனால், அவர்கள் அகில உலகிற்கும் இன்றியமையாதவர்கள். எனவே, அமாவாசை, பவுர்ணமி நாள்களில் நீங்கள் அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தலாம்’ என்று இறைவன் அவர்களுக்கு வரம் அளித்தார். மேலும் இறைவன் அருளால் மனிதத் தலையும் பாம்பு உடலும் கொண்டு ‘ராகு’வும், பாம்புத் தலையும் மனித உடலும் கொண்டு ‘கேது’வும் உருமாறினர். அதுவரை இருந்த 7 கிரகங்களுடன் சேர்ந்து 9 கிரகங்களாக அவர்கள் விளங்கும்படி சிவபெருமான் வரமருளினார்.

இத்தகைய சிறப்புகளை உடைய தலம் சீர்காழி நாகேஸ்வரமுடையார் திருக்கோயில். கோயிலின் தலைவாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் எழிலுற நிற்கிறது. உள்ளே நுழைந்ததும் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய மகா மண்டபம். அடுத்து அர்த்த மண்டபமும், கருவறையும் உள்ளன. கருவறையில் இறைவன் நாகேஸ்வரமுடையார் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார். இறைவி புன்னாகவல்லி தென்திசை நோக்கி அருள்புரிகிறாள்.

இருவரையும் ஓரிடத்தில் நின்று வழிபடலாம். தேவக் கோட்டத்தின் தென் திசையில் தட்சிணாமூர்த்தி காட்சி கொடுக்கிறார். பிரகாரத்தின் தென் மேற்குத் திசையில் நாக மாணிக்கத்தை வைத்து பூஜை செய்த மாணிக்க விநாயகரும், மேற்கு திசையில் வள்ளி- தெய்வானையுடன் முருகப்பெருமானும், வடமேற்கு திசையில் சண்டிகேசுவரரும், வடகிழக்கு திசையில் சூரியன், விநாயகர் மற்றும் பைரவரும், தென்கிழக்கு திசையில் வள்ளியும், வள்ளிக்கு அருளிய விநாயகரும் காட்சி தருகின்றனர்.

இந்தக் கோயிலில் ஆகம விதிப்படி துர்க்கை மற்றும் நவகிரக சந்நிதிகள் அமைந்திருக்கவில்லை. ராகுவின் நண்பன் சனி என்பதால் சனி தன் மனைவியுடன் ராகுவின் சந்நிதியில் இருக்கிறார். மேலும் ராகு, கேதுவுக்கு இந்த ஆலயத்தில் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இது ராகு பரிகாரத் தலம் என்பதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் ராகு கால நேரத்தில் சுவாமி, அம்மன் மற்றும் ராகு பகவானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. ராகு தோஷம் உள்ளவர்கள் ராகு, கேது சந்நிதிகளை இடதுபுறம் 9 முறையும், வலதுபுறம் 3 முறையும் அடி பிரதட்சிணம் செய்கின்றனர். இப்படி 11 வாரம் செய்வதால் தோஷ நிவர்த்தி ஏற்படுகிறது என்று நம்புகின்றனர்.